பேசும் பரம்பொருள் – பகுதி-2
பேசும் பரம்பொருள் – பகுதி-2, சுதா சேஷய்யன், வானதி பதிப்பகம், பக். 480; ரூ.350
ஒவ்வொரு தெய்வத்தின் தோற்றத்தையும், நமது பாரத நாடு எத்தகைய பாரம்பரியத்தைக் கொண்டது என்பதையும் விரிவாகவும், வாசிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் கதை மூலம் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
விநாயகரின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றியும்,தோப்புக்கரணம் என்பதன் பொருளையும், விநாயகருக்கு ஒற்றைக்கொம்பன் என்ற பெயர் எப்படி வந்தது, இடது கொம்பை விநாயகர் தானே ஒடித்து எழுத்தாணியாக்கிய சம்பவத்தையும் எத்தனை முறை படித்தாலும் திகட்டாதவிதத்தில் அழகுற விளக்கியுள்ளார்.
இதேபோல வீரம், துணிச்சலுக்கு அதிபதியான துர்க்கை (மலைமகள்), செல்வத்துக்கு அதிபதியான லெட்சுமி (அலைமகள்), கல்விக்கு அதிபதியான சரஸ்வதி (கலைமகள்) ஆகிய மூன்று தெய்வங்களையும் வழிபடும் நவராத்திரி விழா நாடு முழுவதும் எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பதைச் சுவைபட எழுதியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அம்மன் வழிபாட்டை அறிவியல்பூர்வமாக தெளிவுபட விளக்கியுள்ளார். பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வாயார, மனமார வாழ்த்துவது நமது மரபு, பண்பாடு. பதினாறு கிடைத்தால் பெருவாழ்வு என்று புரிகிறதே தவிர, அவை என்னென்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
பதினாறும் பெற்று பெருவாழ்வு என்றால் பதினாறு குழந்தைகள் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்றுதான் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். கல்வி, தனம், அறிவு, நோயின்மை உள்ளிட்ட 16 பேறுகளை என்ன என்று தெளிவுபட உதாரணங்களுடன் விளக்கி நமக்குப் புரிய வைக்கிறார். மதநம்பிக்கையின் பின்னணியில் உள்ள வாழ்வியல் சிந்தனைகளையும், அறிவியல் உண்மைகளையும் எடுத்துச்சொல்லும் முயற்சியில் நூலாசிரியர் சுதா சேஷய்யன் வெற்றிபெற்றுள்ளார். மொத்தத்தில் ஆன்மிகம்,
அறிவியல், தெய்வீகம் ஆகிய மூன்றையும் ஒன்றுடன்
ஒன்றை தொடர்புபடுத்தி எளிமையாக எடுத்துச்சொல்லி வாசகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். ஆன்மிகத் தேடலில் நாட்டமுள்ள இளைஞர்கள், பெண்களுக்கு இந்த நூல் ஓர் ஆன்மிகக் களஞ்சியம் என்று சொன்னால் அது மிகையாகாது.”,
நன்றி: தினமணி, 4/2/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818