புதிர்
புதிர் (நாடகம்), கவிஞர் வேலூர் இரா.நக்கீரன், வெளியீடு: கவிதாலயம், விலை:ரூ.100.
சில பத்தாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டு நடிக்கப்பட்ட ‘புதிர்’ நாடகம் புத்தக வடிவம் பெற்றுள்ளது. மிகக் குறைந்த கலைஞர்களுடன் மிக எளிமையான காட்சியமைப்பு மூலம் நடித்துக்கொள்ள நாடகாசிரியர் சில யோசனைகளையும் முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. விலை போகாத, நேர்மையான அரசாங்க வழக்கறிஞராக இருந்த மாணிக்கவாசகம் நீதிபதியாகப் பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுவிடுகிறார்.
நீதிபதியாவதற்கு முன்னால் யார் அவருடன் விரோதம் பாராட்டினார்கள் என்ற ஃபிளாஷ்பேக் காட்சிகள் மூலம் சந்தேக முள்ளை ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் எதிராக நகர்த்திக்கொண்டே போய், கொலையாளி யார் என்பதை வெளிப்படுத்தும்போது சபாஷ் போட வைக்கிறது. காமெடிக்கென்று தனி டிராக் தேவையில்லாமல், இருக்கும் சில கதாபாத்திரங்களே நகைச்சுவையைப் பகிர்ந்து தருகிறார்கள்.
கொச்சைத் தெலுங்கு, வடஆர்க்காட்டுத் தமிழ், உருது கலந்த தமிழ் ஆகியவை நாடக ஓட்டத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை. வயிற்றுப்போக்கு போவதை நகைச்சுவையாகப் பார்த்த காலம் ஒன்று இருந்ததை நாடகம் நினைவுபடுத்துகிறது. தமிழ்நாட்டு மேடைகளில் நடிக்கப்பட்டு, மறக்கப்பட்டுவிட்ட எல்லா நாடகங்களையும் நூல் வடிவில் கொண்டுவர தமிழ் வளர்ச்சித் துறை முயன்றால் என்ன என்ற கேள்வி இந்த நூலைப் படித்ததும் எழுகிறது.
நன்றி: தமிழ் இந்து,4/9/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818