சத்யஜித்ரே வாழ்வும் வழியும்
சத்யஜித்ரே வாழ்வும் வழியும், வீ.பா.கணேசன், விகடன் பிரசுரம், பக்.216, விலை .ரூ.160;
இந்திய சினிமாவின் துருவ நட்சத்திரமாக விளங்கும் இயக்குநர் சத்யஜித்ரேயின் வாழ்க்கைப் பயணத்தையும், கலைப் பயணத்தையும் விரிவாக அறிந்து கொள்ள உதவும் நூல்.
கொல்கத்தா நகரவாசியாக இருந்த ரே, கிராமிய சூழலில் இருந்த சாந்தி நிகேதனில் சேருவதற்குக் காட்டிய தயக்கம், பின்னர், நுண்கலை பயில அங்கே சேருதல், 20 வயதான ரே, 80 வயது தாகூரை நான்குமுறை சந்தித்தும் இயல்பாகப் பேச முடியாமல் போனது, தாகூர் மறைவுக்குப்பின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறியது, தாகூரின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது, ரேவின் பாக்கெட்டில் இருந்த பணம் களவாடப்பட்டது; அதனால் ஜொரசங்கோவிலிருந்து மேற்கு கல்கத்தாவில் உள்ள மாமா வீட்டுக்கு வெறும் காலுடன் அவர் நடந்தே சென்றது என ரேவின் இளமைக்கால நிகழ்வுகள் நம்மை வியக்க வைக்கின்றன.
அவர் தனது முதல் படமான “பதேர் பாஞ்சாலி’ யை எடுப்பதற்காக பட்ட சிரமங்கள், “அபராஜிதா’, “அபுர் சன்சார்’ போன்ற படங்கள் உருவான விதம் ஆகியவை அவருடைய வெற்றிகளுக்குப் பின் இருக்கும் அவருடைய கடும் உழைப்பை நமக்குத் தெரிவிக்கின்றன. மேலும், அவற்றின் கதைச் சுருக்கங்கள் இடம்பெற்றிருப்பது நூலின் சுவையைக் கூட்டுகிறது.
மேற்கத்திய இசை, ஓவியம், திரைப்படங்கள் மீது சத்யஜித்ரேவுக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாடும், சிறு வயது முதலே அவர் சினிமாவை நேசித்த விதமும், அவருடைய கலை வேட்கையும் புலப்படுகிறது.
நூலாசிரியர் தமிழ் தவிர ஆங்கிலம், வங்காளி மொழிகளிலும் ஆற்றல் நிறைந்தவராக இருப்பதும், அவர் மேற்கு வங்கத்தில் 25ஆண்டுகள் அரசு செய்தித் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதும் சத்யஜித்ரேயின் பன்முகத் திறமைகளைப் பறைசாற்றும் இந்த நூலை எழுத அவருக்கு உதவியிருக்கிறது.
நன்றி: தினமணி, 6/3/3017.