ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்
ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம், மோஹன் ஜகந்நாத் யாதவ், தமிழில்: சிவசங்கரி, ஷீரடி சாயி டிரஸ்ட், பக். 384.
ஸ்ரீ சாயி சரித்திர தரிசனத்தை தமிழில் பக்திபூர்வமாக மொழி பெயர்த்துத் தந்துள்ளார் எழுத்தாளர் சிவசங்கரி. இந்நூலில் மகான் சாயி பாபாவின் அருமை பெருமைகளை, அவரின் அருள் திறத்தை ஆன்மிகக் கருவூலத்தை தனித்தனி அத்தியாயங்களில் தனிச் சிறப்போடு தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
சாயிபாபா உள்ளிட்ட மகான்களும் அவதார புருஷர்களும் ஏன் யாசகம் பெறுகின்றனர் என்பதற்கான அருமையான, அரிதான விளக்கம் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஞானிகளின் கதைகளைக் கேட்க வேண்டுமென்ற தீவிர விருப்பம், இறைவனின் அருளின்றி நம் மனதில் தோன்றாது.
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே மகான்களால் தெளிவாக உணரப்படுகின்றன என்பதை சாயிபாபாவின் அதிசய நிகழ்வுகள், திருவிளையாடல்கள் மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. பூர்வ ஜென்மத் தொடர்பின்றி எவருக்கும் இன்னொருவருடன் பரிச்சயம் ஏற்படுவதில்லை என்று பாபா கூறுவதன் உண்மையை கர்ம வினை மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.
பாபா தனது பக்தர்களுக்குச் சரியான நேரத்தில் சரியான எச்சரிக்கைகளைத் தந்து அவர்களைத் தக்க சமயத்தில் காப்பாற்றியிருப்பதை இந்த சரிதத்தில் காண முடிகிறது.
நன்றி: தினமணி, 24/7/2017.