சூரிய வம்சம்
சூரிய வம்சம் (இரண்டு பகுதிகள்), சிவசங்கரி, பதிவு – எழுத்து: ஜி.மீனாட்சி, வானதி பதிப்பகம், விலை: ரூ.600.
நினைவை மீட்டுவதென்பது காலச் சக்கரத்தில் ஏறிப் பின்னோக்கிப் பயணித்து மீள்வதைப் போன்றது. ‘சூரிய வம்சம்’ நினைவலைகளின் மூலம் அதை நிகழ்த்துகிறார் சிவசங்கரி. வாழ்க்கை சுரத்தில்லாமல் நிறமிழக்கும் நேரத்தில், மலர்ந்து சிரிக்கிற வசந்தத்தைப் போல எழுத்துலகில் புதுப் பாய்ச்சலுடன் புகுந்தவர் அவர். மானசீகமாகத் தன்னை அம்மாவாக ஏற்றுக்கொண்ட லலிதாவுக்காகத் தன் நினைவலைகளைத் தொகுத்திருக்கிறார். இது சுயசரிதை அல்ல என்று சொல்லும் சிவசங்கரி, சிலரது முகமூடிகளைக் கிழிக்க வேண்டிவரும், பலரைக் காயப்படுத்த வேண்டிவரும் என்பதால் அதைத் தவிர்த்துவிட்டுத் தேர்ந்தெடுத்த நிகழ்வுகளை மட்டும் நேர்த்தியாகத் தொடுத்திருக்கிறார்.
குழந்தைப் பருவம் தொடங்கி இன்று வரை தன் நினைவுக்குள் தங்கியிருப்பவற்றை மனத்துக்கு அணுக்கமான தொனியில் பகிர்ந்துகொள்கிறார். தன் குடும்ப உறவுகள், வாழ்க்கைப் பயணத்தில் உடன் வந்த நண்பர்கள், சந்தித்த ஆளுமைகளைப் பற்றி சிவசங்கரி விவரிக்கும்போது இவ்வளவு நெடிய பயணமா என வியப்பு ஏற்படுகிறது. அனைத்தையும் போகிறபோக்கில் சொல்வதுபோல் இருந்தாலும், அவர் விவரிக்கிற நிகழ்வுகள் ஏற்படுத்துகிற தாக்கத்தில் அங்கேயே மனம் சில நிமிடங்களுக்கு நின்றுவிடுகிறது. மெட்ராஸில் தொடங்கி விழுப்புரத்துக்குச் சென்று அங்கிருந்து அலாஸ்கா, அயோவா எழுத்தாளர்கள் மாநாடு, எகிப்து, மலேசியா என்று பல நாடுகளுக்கும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அழைத்துச் சென்று மீண்டும் சென்னைக்கே அழைத்துவந்துவிடுகிறார்.
ஜன்னலோர இருக்கையில் நம்மை உட்காரவைத்து, கடந்து செல்கிற மனிதர்களையும் நிகழ்வுகளையும் அவர் விவரிக்கிற நேர்த்தியில் எல்லாமே பலவண்ணக் காட்சிகளாக விரிகின்றன. ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’, எழுத்துலகுக்கு சிவசங்கரி ஆற்றிய முக்கியமான பங்களிப்பு. 1994-ல்
அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்த 18 இந்திய மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களில் சிலரைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு தொகுதிகளாக வெளியிட்டார். அந்தத் தொகுப்புகள் வெளிவர அவர் செலுத்திய உழைப்பைப் படிக்கும்போது மலைப்பாக இருக்கிறது.
நன்றி: தமிழ் இந்து, 07.12.2019.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818