சூழலும் சாதியும்
சூழலும் சாதியும், நக்கீரன், காடோடி பதிப்பகம், விலை: ரூ.80.
சூழலியல் சார்ந்த அக்கறைகளை நாவல் வடிவிலும் அபுனைவாகவும் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் நக்கீரனின் புதிய புத்தகம் ‘சூழலும் சாதியும்’. சூழலைச் சாதி எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது.
சாதி அவ்வளவு எளிதாக வேரறுத்துவிட முடியாத அளவுக்குப் பலம் கொண்ட ஆற்றலாக இருக்கக் காரணம், அது நம் வாழ்க்கையின் சகல கூறுகளோடும் சிக்கலான பிணைப்பைக் கொண்டிருப்பதுதான். இந்தச் சிக்கலான பிணைப்பைப் புரிந்துகொள்வதற்கு அதன் ஒவ்வொரு கூறுகளின் மீதும் தனித்தனியாகக் கவனம் குவிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில், இந்தப் புத்தகம் சூழலுக்கும் சாதிக்கும் உள்ள உறவில் மையம்கொள்கிறது.
உணவு, நிலம், நீர், நெருப்பு, வானம், காற்று, செடி, கொடி, பறவை, காலம், வெளி என ஒவ்வொன்றிலும் சாதிய மாசு படிந்திருக்கும் விதத்தை நாட்டார் கதைகளில் ஆரம்பித்து, ஆய்வாளர்களின் அவதானிப்புகள் வரையிலான தகவல்களால் விவரிக்கிறார் நக்கீரன்.
இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் தகவல்களையெல்லாம் கருத்தாக்கங்களால் கோத்து விரிவாக்கி எழுதினால், அது சாதிய உரையாடல்களில் மிகப் பெரும் பங்காற்றும். இப்படி ஒரு கருப்பொருளில் தகவல்களைத் தொகுக்க வேண்டும் என்ற முயற்சியே பாராட்டுக்குரியது. அன்றாட வாழ்க்கையில் சர்வசாதாரணமாகப் புழங்கும் பல விஷயங்கள் சாதியோடும் தீண்டாமையோடும் தொடர்புகொண்டதாக இருக்கின்றன என்பது சாதிக்கு எதிராகப் பேசும் நபர்களின் பிரக்ஞைக்குக்கூட வருவதில்லை என்பது ஒரு யதார்த்தம். அது ஒருவகையில் சாதியின் பலமும்கூட. அப்படியான பழக்கவழக்கங்களை ‘இது தீண்டாமை’ என்று நம் பிரக்ஞைக்குக் கொண்டுவந்து, அதிலிருந்து வெளியேற முயற்சி எடுப்பதற்கு இப்படியான புத்தகங்கள் அதிகம் வர வேண்டும்.
நன்றி: தமிழ் இந்து, 10/4/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818