தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம்
தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம், வே. ராகவன், டாக்டர் வே. ராகவன் நிகழ்கலை மையம், பக். 440, விலை 650ரூ.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவரும், சமஸ்கிருத மொழிக்கும் கர்நாடக இசைக்கும் பெரும் தொண்டாற்றியவருமான டாக்டர் வே.ராகவன், 1930 களில் தொடங்கி பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
கணபதி, ஸுப்ரமண்யர், லக்ஷ்மி போன்ற கடவுள்களைப் பற்றியும், தீபாவளி, மாட்டுப் பொங்கல், திருவாதிரை முதலிய பண்டிகைகள் பற்றியும், மகாகவிகளான காளிதாஸர், பாரவி, தண்டி போன்றோர் பற்றியும், நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த பாரதியார், காஞ்சிப் பெரியவர் போன்ற மகான்கள் பற்றியும் மற்றும் பாகவத மேளா, நாட்டிய இசை போன்ற கலை வடிவங்கள் பற்றியும் ஆய்வு நோக்கிலும், சுவை குன்றாமலும் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
கணபதி சிற்பம் முதன்முதலில் இரண்டாம் நூற்றாண்டில்தான் காணப்படுகிறது, வால்மீகி ராமாயணத்திலேயே விசுவாமித்திரர் ராம, லக்ஷ்மணர்களுக்கு முருகனின் வரலாற்றைக் கூறியுள்ளார், தீபாவளி மருந்து என்பது அதற்கு முந்தைய நாள் பிறந்த ஆயுர்வேத கடவுள் தன்வந்திரியோடு தொடர்புடையது, அக்ஷய திருதியை அன்று கிருதயுதம் தொடங்கியது, சமஸ்கிருத மகாகவியான தண்டி தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழர், சோழ அரசர்கள் செம்பியன் என்று கூறப்படுவதன் காரணம், அவர்கள் சிபிச்சக்கரவர்த்தியின் மரபில் வந்ததே, மாட்டுப் பொங்கல் எனப்படும் கால்நடைகளைக் கொண்டாடும் விழா குறித்து ஸ்கந்த புராணத்திலும், பவிஷ்ய புராணத்திலும் கூறப்பட்டுள்ளது – இப்படி நூலெங்கும் விரவியிருக்கும் அரிய தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
இத்தொகுப்பிலுள்ள “சமஸ்கிருத நாடகம்’ என்னும் கட்டுரையும், “ஒளசித்யம்’ என்ற கட்டுரையும் இலக்கிய ஆவணங்கள். அதுபோலவே,”காளிதாஸ நூல்களின் தமிழ் ஆக்கங்கள்’ என்னும் கட்டுரையில், “அபிஜ்ஞான சாகுந்தலம்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்த மறைமலை அடிகளின் மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டு விளக்கியிருப்பதும் அற்புதம்.
இந்தியப் பண்பாட்டை அறிய விரும்புவோருக்கு இத்தொகுப்பு ஓர் அரிய பொக்கிஷம்.
நன்றி: தினமணி, 25/9/2016.