தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?
தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?, கி.வீரமணி, திராவிடர் கழகம், விலை: ரூ.180
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி எழுதியிருக்கும் ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’ என்ற புத்தகம், 270 பக்கங்களில் 20 அத்தியாங்களில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வாழ்வியல் ஆகியவை மேம்பட பெரியார் செய்த மகத்தான பங்களிப்புகளைப் பேசுகிறது.
தமிழ், தமிழர் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த ஓயாத அக்கறையையும், அதற்கு அவர் செலுத்திய அயராத உழைப்பையும் விவரிக்கிறது. பெரியாரின் உரைகள், ‘விடுதலை’, ‘குடிஅரசு’ இதழ்களில் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் மட்டுமல்லாமல் அவரது சமகாலத் தமிழறிஞர்களான திரு.வி.க., பாரதிதாசன், ம.பொ.சி., சோமசுந்தர பாரதியார், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்டோர் பெரியாரின் தமிழ்த் தொண்டு பற்றிக் கூறிய கருத்துகளும் விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளன.
பெரியார் தமிழை ஆரிய மேலாதிக்கத்துக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தினார் என்பதும், அந்த ஆயுதம் நவீனக் காலத்துக்கு ஏற்றதாக மாற்றப்பட வேண்டும் என்பதையே அவர் தமிழ் மொழி மீதான விமர்சனங்களாக வெளிப்படுத்தினார் என்பதையும் இந்நூல் விளக்குகிறது. தமிழை அவர் காட்டுமிராண்டி மொழி என்று கூறியதும் அத்தன்மையிலானதே என்பதை விளக்க ஒரு தனி அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருக்குறள் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அந்நூலை அவர் எவ்வளவு மதித்தார், அதன் பெருமைகளை எப்படியெல்லாம் பரப்பினார் என்பவை ‘குறளைப் பரப்பிய பெரியார்’ என்ற அத்தியாயத்தில் விரிவான தரவுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. சென்னை ராஜதானிக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வேண்டும் என்பதையும் பெரியார் தன் எழுத்துகளிலும் பேச்சுகளிலும் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார்.
பொங்கலை ‘தமிழர் பண்டிகை’யாக இடம்பெறச் செய்ததிலுள்ள பெரியாரின் பணியும் நூலில் இடம்பெற்றுள்ளது. அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்துச் சீர்த்திருத்தங்களை முன்மொழிந்து தமிழ் மொழியைப் புதுப்பித்ததோடு நில்லாமல், தமிழ்நாட்டின் பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் தமிழர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள எதுவும் இல்லை என்பதையும், புராணக் கதைகளை விடுத்து தமிழர்களின் வரலாற்றை, அவர்தம் வாழ்வியலைத் தமிழ் மாணவர்களுக்குப் பாடமாகப் புகட்ட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசியிருக்கிறார் என்பதைப் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள உரைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
திராவிட இயக்கமும் அதைத் தொடங்கியவரான பெரியாரும் தமிழுக்கும் தமிழினத்துக்கும் விரோதிகள் என்று சித்தரிக்கப்படும் பிரச்சாரத்தை ஆதாரங்களுடனும் தரவுகளுடனும் எதிர்கொண்டு உடைக்கிறது இந்நூல்.
– ச.கோபாலகிருஷ்ணன்
நன்றி: தமிழ் இந்து, 13/4/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027978.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818