திருவள்ளுவர் 2050 ஆண்டுகள்… அடைவுகள்

திருவள்ளுவர் 2050 ஆண்டுகள்… அடைவுகள், நூல் உருவாக்கக் குழு பொறுப்பாளர், பொழிலன், பாவலரேறு தமிழ்க்களம், பக்.984, விலை ரூ.900.

திருக்குறள் தொடர்பான 2050 காலச் செயல்பாடுகளை இந்நூல் தொகுத்து வழங்கியிருக்கிறது. திருக்குறள் தோன்றிய காலத்தை ஆராயும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

திருவள்ளுரின் அறம், அரசியல், அவர் காட்டும் தமிழர் வாழ்வியல், வள்ளுவரின் கடவுள் சிந்தனை ஆகியவற்றைப் பற்றிச் சொல்லும் கட்டுரைகள், திருக்குறள் சமணம் சார்ந்ததா? புத்த மதம் சார்ந்ததா என ஆராயும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

திருக்குறளில் வைதீகக் கருத்துகள், சைவ சித்தாந்த கருத்துகள், இசுலாமியச் சார்புக் கருத்துகள், கிறிஸ்தவச் சார்புக் கருத்துகள், பகுத்தறிவுச் சார்புக் கருத்துகள் இடம் பெற்றிருப்பதை விளக்கிச் சொல்லும் கட்டுரைகளும் உள்ளன.

சமனற்ற வளர்ச்சி உள்ள ஒரு சமூக நிலைமையையே குறளில் காணுகிறோம். சமனற்ற தன்மைகளினூடே அடிப்படையான சமூக மாற்றம் ஏற்படும் ஒரு காலகட்டத்தில், அம் மாற்றங்களுக்கான ஒழுங்கான வாய்க்காலை அமைப்பதே குறளின் புலமை முயற்சியாகும் என்பதை விளக்கும்  கார்த்திகேசு சிவத்தம்பியின் கட்டுரை, திருக்குறள் தோன்றியதற்கான காரணத்தை விளக்குகிறது.

திருக்குறளின் அறவியல் சமயச் சார்பற்றது; அது முழுக்க முழுக்க உலகியல் சார்ந்த அறவியலையே முன் வைக்கிறது என்பதை விளக்கும் ந.முத்துமோகனின் கட்டுரை, பெளத்த மதத்தின் தம்மபதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் திருக்குறளில் இருப்பதை எடுத்துக்காட்டும் மயிலை சீனி.வேங்கடசாமியின் கட்டுரை உள்ளிட்ட   பல சிறப்பான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகள், குன்றக்குடி அடிகளார், தொ.பொ.மீ., வ.ஐ.சுப்பிரமணியம், தொ.பரமசிவன்,  அயோத்திதாசப் பண்டிதர், அமுதன் அடிகள், தனிநாயகம் அடிகள், ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்கள் எழுதிய குறிப்பிடத்தக்க கட்டுரைகளும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் திருக்குறள் ஏற்படுத்திய தாக்கங்களைச் சொல்லும் கட்டுரைகளும் உள்ளன.
திருக்குறள் தொடர்பான பலவிதமான பார்வைகளைத் தெரிந்து கொள்ள உதவும் அரிய தொகுப்பு.

நன்றி: தினமணி, 22/9/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *