திருவருட்பா பதிப்புச் சோலை

திருவருட்பா பதிப்புச் சோலை, இராம.பாண்டுரங்கன், ஐந்திணை வெளியீட்டகம், பக்.224, விலை ரூ.200.

காலந்தோறும் ஆவணப்படுத்துதல் என்பது இன்றியமையாத ஒன்று. வரலாறுகளை ஆவணப்படுத்துதலின் மூலமாகவே பல்வேறு வரலாறுகளை அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் தமிழ் வரலாறுகளின், தமிழ் ஆய்வுகளை ஆவணப்படுத்தலின் தேவையை இந்நூல் வலியுறுத்துகிறது.

1867 முதல் 1972 வரை வெளியான திருவருட்பா பதிப்புகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வள்ளலாரின் "திருவருட்பா' தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய செல்வம். தாயுமானவர், பாரதியார், வானமாமலை, ம.பொ.சி. முதலியோர் பார்வையில் வள்ளலார் குறித்த விரிவான விளக்கம் சிறப்பு.

தமிழ் நூல் பதிப்பு, பதிப்புப் பணிகள், திருவருட்பா பதிப்புக்கு முன்வந்த பதிப்புகள், வள்ளலார் சென்னையில் பாடியவை, வடலூரில் பாடியவையும் அனைத்தும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவரே பதிப்பித்த ஒழிவிலொடுக்கம், தொண்டைமண்டல சதகம், சின்மய தீபிகை ஆகியவையும்; அவர் வாழ்ந்த காலத்தில் வள்ளலார் அன்பர்கள் பதிப்பித்த நூல்கள் மற்றும் வள்ளலார் காலத்திற்குப் பிறகு பதிப்பிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

திருவருட்பாவின் முழு பதிப்பு, குறிப்பிட்ட பாடற்பகுதிகள் மட்டும் பதிப்பு, பதிப்புடன் கூடிய உரைப்பதிப்பு, உரைநடையுடன் கூடிய பதிப்பு, பலமுறை பதிப்பிக்கப்பட்ட பதிப்புகள், பலரால் பதிப்பிக்கப்பட்ட பதிப்புகள், திருவருட்பா பதிப்பு நெறிகள், பாடவேறுபாடுகள் (பாடபேதம்), பதிப்பின் வரையறைகள், இலக்கணக் குறிப்புகள், நுட்ப விளக்கம், வடமொழி மரபில் உரைவிளக்கம், தத்துவக் குறியீட்டுச் சொல் விளக்கங்கள் முதலிய பலவும் ஆராயப்பட்டுள்ளன. திருவருட்பா பதிப்பு குறித்த மிகச்சிறந்த ஆவணம் இந்நூல்.

நன்றி: தினமணி, 5/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *