திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம்
திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம் (51 பகுதிகள் 51 ஆய்வுரைகள்), பதிப்பாசிரியர்கள் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், குன்றக்குடி பெரியபெருமாள், தா.மணி, பக்.256, விலை ரூ.100.
2002ஆம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூல், தற்போது இரண்டாவது(2016) பதிப்பு கண்டிருக்கிறது. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்களுக்கும் 51 சமயத் தமிழறிஞர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.
தவத்திரு ஊரன் அடிகள், சாந்தலிங்க இராமசாமி அடிகளார், வை.இரத்தினசபாபதி, தமிழண்ணல், கலைமாமணி விக்கிரமன், ச.வே.சுப்பிரமணியன், அய்க்கண், கு.வெ. பாலசுப்பிரமணியன், பழ.முத்தப்பன், சரஸ்வதி இராமநாதன், சோ.சத்தியசீலன், கவிஞர் மரு.பரமகுரு, தெ.முருகசாமி ஆகியோர் பொருளுணர்ந்து எழுதியுள்ள ஆழ்ந்தகன்ற விளக்கவுரைகள் குறிப்பிடத்தக்கவை.
“சொல்லற்கு அரியவனாகிய’ சிவபரம்பொருளின் பெருமையை எவ்வாறு விரித்துரைக்க முடியாதோ அதைப்போல மணிவாசகரின் அன்பு நூலான திருவாசகத்தின் பெருமையையும் எவராலும் விரித்துரைக்க முடியாது. “விரிப்பிற் பெருகும்; தொகுப்பின் எஞ்சும்’ என்று கூறுவர் சான்றோர். இறைவன் திருவடியை அடைந்து முத்தி (பேரின்பம்) பெற வேண்டும் என்று விருப்பப்படும் ஒவ்வோர் உயிரும் உருகி, பாட்டின் பொருள் உணர்ந்து ஓத வேண்டிய ஞான நூல் திருவாசகம். இதிலுள்ள 51 பகுதிகளுக்கும் 51 பேரறிஞர்கள் எழுதியுள்ள மிகச் சிறந்த ஆய்வுரைகளே இத்தொகுப்பின் பெருமையைப் பறைசாற்றும்.
நன்றி: தினமணி, 19/6/2016.