தொல்லியல் ஆய்வில் கண்ட வரலாற்று சான்றுகள்

தொல்லியல் ஆய்வில் கண்ட வரலாற்று சான்றுகள், கி.ஸ்ரீதரன், நாம் தமிழர் பதிப்பகம், பக்152, விலை ரூ.160.

தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றிய நூலாசிரியர், கல்வெட்டுகள், அரிய சிற்பங்கள், நினைவு கற்கள், மைல்கல், கோயில்கள், செப்பேடுகள் ஆகிய வரலாற்று ஆதாரங்கள் கூறும் அரிய தகவல்களை இந்நூலின் மூலம் நமக்கு தொகுத்து அளித்துள்ளார்.

மதுரை – திண்டுக்கல் சாலையில் உள்ள வடுகபட்டி என்ற ஊரில் உதயசந்திரன் என்பவருடைய குடும்ப நிலத்தில் கிடைத்த கல்வெட்டு தொடர்பான தகவலுடன் தொடங்கும் இந்நூல், திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டி அருகர் கோயில், சமணக் கோயில்கள், சிற்பங்கள், தாம்பரம் வட்டம் ஆலந்தூரில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் நுழைவு வாயிலில் உள்ள பல்லவர் கால கல்வெட்டு, திருச்சி மாவட்டம் தேவிமங்கலம் அக்கரைப் பட்டி ஏரிக்கரையில் உள்ள கல்வெட்டு உள்ளிட்ட பல கல்வெட்டுகள் தரும் செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

அயோத்தி நகரில் உள்ள நகரத்தார் அன்னதான சத்திரம் பற்றிய தகவல்கள் வியக்க வைக்கின்றன. தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டையிலிருந்து தர்மபுரி செல்லும் சாலையில் உள்ள மைல்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் கெங்கி ரெட்டிப்பட்டி என்ற ஊரில் காணப்படும் மைல் கல் ஆகியவை 13- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். 128 கி.மீ. தூரம் உள்ள திருச்சி – மதுரை இடையிலான தூரத்தை 80 நாழிவழி என்று திருச்சியில் கிடைத்த மைல் கல் குறிப்பிடுகிறது.

கோயிலில் பணிபுரிபவர்களுக்கு தரப்படும் சட்டிச்சோறு குறித்த தகவல்களைப் பல கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் தரும் தகவல்களின் அடிப்படையில் அன்றைய வரலாற்று நிகழ்வுகள், ஆட்சி புரிந்தவர்களின் செயல்கள், மக்களின் வாழ்நிலை, சமண சமயத்தின் தாக்கம் என அனைத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

நன்றி: தினமணி, 24/1/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *