உடல்மொழியின் கலை
உடல்மொழியின் கலை, வெளி ரங்கராஜன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.120
கலை, இலக்கியம், நாடகம் தொடர்பான வெளி ரங்கராஜனின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பு இது. நேரடிக் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாக மொத்தம் 22 கட்டுரைகள். கலை வடிவங்களை ஆவணப்படுத்துவதன் வழியாக சமூக வரலாற்றைப் பேசும் புத்தகமாகவும் இந்நூலை வாசிக்க இடமுண்டு. பிரதிகள் சார்ந்ததாக மட்டுமல்லாமல் நபர்களும், அரசு நிறுவனங்களின் நடவடிக்கைகளும், சமூகத்தின் பிரதிபலிப்புகளும் விவாதமாகியிருப்பது இந்நூலின் தனித்துவம் எனலாம்.
மதங்களுக்கு உள்ளிருக்கும் குடும்ப அறநெறிகளும் ஏற்றத்தாழ்வுகளும் சமூக உளவியலுக்குள் ஏற்படுத்தியிருந்த துயரங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காகவே பக்தி இலக்கியங்கள் உருப்பெற்றதாகக் கணிக்கிறார் வெளி ரங்கராஜன். நிறுவனம் மற்றும் அதிகாரக் கட்டுமானத்துக்கான எதிர்ப்பின் முகமாகச் சிறுபத்திரிகை இயக்கம் செயல்பட்டதைச் சொல்கிறார். புதுமைப்பித்தனின் கதைகளை நீக்கிய பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளைக் காட்டமாகப் பதிவுசெய்கிறார். நம் இலக்கிய வரலாற்றில் மிகைப்படுத்தல்களும் பூடகமான படைப்புச் செயல்பாடுகளும் எத்தகைய போதாமையை உருவாக்கியிருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். நாட்டியக் கலையின் வசீகரத்தையும், அதன் அழகியல் சாரத்தையும் பிரதிபலித்த ‘பாலசரஸ்வதி’யின் வரலாற்றுப் பின்புலங்களை விளக்கியிருக்கிறார். இப்படி நிறைய.
கலைகளில் உடல்மொழியின் வெளிப்பாடுகள் குறித்துப் பேசும் கட்டுரைகள் முக்கியமானவை. உடலானது கலையில் எல்லையற்ற சாத்தியங்களின் வெளிப்பாடுகளை அடைவதையும், கலாச்சாரத்தின் குறியீடாக மாற்றப்படும் உடல்கள் அடைந்துகொண்டிருக்கும் துன்பங்களையும் இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன. தமிழ்ச் சூழல் மட்டுமல்லாமல் மேற்கத்தியப் பார்வைகளையும் இந்தத் தொகுப்பு கொண்டிருக்கிறது. மார்க்குவெஸின் புகழ்பெற்ற கதையானது நாடக வடிவம் பெறும்போது நிகழும் நுட்பமான மாற்றங்களைப் பேசும் கட்டுரை சுவாரஸ்யமானது.
வேறுபட்ட பின்புலம், வேறுபட்ட கலாச்சார உரையாடல்கள், வேறுபட்ட கலை வடிவங்கள் என இந்தப் புத்தகம் கலவையான வாசிப்பின்பம் தருகிறது. புனைவின் வசீகரத்தோடும், அழகியல்பூர்வமாகவும் இந்நூல் கொண்டிருக்கும் சொல்லாடல்கள் வாசகர்களிடத்தில் மிக எளிமையாகத் தன் நோக்கத்தை நிறைவேற்றிவிடுகின்றன. கலை சார்ந்த நுட்பமான பார்வைகளையும், கலை வடிவங்களில் மரபும் நவீனமும் நிறைந்திருக்கும் விதங்களையும் இந்தத் தொகுப்பு அழுத்தமாக உணர்த்திவிடுகிறது.
நன்றி: தமிழ் இந்து, 9/1/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000029820_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818