உன்னை நீ அறிந்து கொள்வது எப்படி
உன்னை நீ அறிந்து கொள்வது எப்படி, தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், இன்டகரல் யோகா இன்ஸ்டியூட், பக்.360, நன்கொடை ரூ.100.
தமிழகம் பெற்ற ஆன்மிக பெரியவர்களுள் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளும் ஒருவர். நூலில் 3 பாகங்களில் 26 தலைப்புகளில் ஆன்மிக வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
ஆன்மிகத்தில் அடியெடுத்து வைப்பவர் முதலில் விடவேண்டியது பேராசை, ஆணவம் என்பதை எடுத்துக்கூறும் சுவாமிகள், ஆன்மிக சாதகர்கள் பெற வேண்டிய மந்திர தீட்சை என்றால் என்ன? தீட்சை அளிக்கும் குருவின் தகுதி, குருவின் பெருமை, தீட்சை பெறும் சீடர் மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் எடுத்துரைக்கிறார்.
ஆன்மிகத்துக்கு உதவும் ஹட யோகம், அஷ்டாங்க யோகம், அவற்றில் கூறப்பட்டுள்ள இயமம், நியமம் ஆகியவற்றையும் தெளிவுபடுத்துகிறார். தியானம் அனைத்தும் கடவுளை அடையும் வழிதானே தவிர, இந்த தியானம் தான் சிறந்தது, மற்ற தியான முறைகள் சிறந்தவை அல்ல என்று கூறுவது தவறு என்கிறார். மேலும் யோக ஆசனங்களின் பலன்கள், பிராணாயமம் மன அமைதிக்கு உதவும் விதம் ஆகியவற்றையும் அழகாக விளக்கியுள்ளார்.
தந்திர யோகம் என்பது ஆண், பெண் உடல் இணைப்பு அல்ல, சிவம்-சக்தியின் இணைப்பே தந்திரயோகம் என்கிறார்.உடலுக்கு நலம் பயக்கும் உணவுகள், உடலைச் சீர்செய்யும் உண்ணாவிரதம் போன்றவை குறித்தும் மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார். சச்சிதானந்த சுவாமிகளின் இந்நூலில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆன்மிக உயர்நிலையை அடைவது உறுதி.
நன்றி: தினமணி, 2/3/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818