உயிரசைதல்
உயிரசைதல், ஜீவிதன், நீந்தும் மீன்கள் வெளியீட்டகம், விலை: ரூ.250.
எரிந்தணையும் தீவிரம்
தொண்ணூறுகளின் மத்தியில் சிற்றிதழ் சூழலில் அறிமுகமாகி 2000 வரை தொடர்ந்து கவிதைகள் எழுதியவர், சிவகங்கையில் வசிக்கும் கவிஞர் ஜீவிதன். பின்னரும் கவிதைகள் எழுதினாலும் முந்தைய அளவுக்குச் சீராக இயங்கவில்லை. நெடுங்காலக் காத்திருப்புக்குப் பின் ஜீவிதனின் கவிதைகள் ‘உயிரசைதல்’ எனும் தலைப்பில் தொகுப்பாகியுள்ளது.
2000-க்குப் பின்பான தமிழ்க் கவிதைகள் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டன. எனினும், ஜீவிதனின் கவிதைகள் கவிமனதின் ஊசலாட்டங்களையும் அலைக்கழிப்புகளையும் அதிகமும் பேசுகின்றன. அக்கவிதைகளில் வெளிப்படும் தவிப்பு அதன் நேர்மைத்தன்மை காரணமாக நம்மைப் பற்றிக்கொண்டு எக்காலத்துக்கும் பொருந்துபவையாக உருக் கொள்கின்றன.
உதாரணமாக இக்கவிதையை எடுத்துக்கொள்ளலாம்.
‘இரண்டு மூன்று நாள்
தொடர் மழையெனில் என்
தாழ்வாரக் குருவிக்கு
தலைகால் புரியா சந்தோஷம்
ஈசலை ஈர்க்கும் விளக்கு
குருவியை ஏனோ ஈர்ப்பதில்லை
ஈசலைவிட குருவி புத்திசாலி
மாயையில் மயங்காதிருக்கிறது
ஈசல் வந்த அடையாளத்துக்காய்
சிறகுகளை விட்டு வைக்கும்
குருவி தாழ்வாரம் முழுவதும்
எச்சத்தையும் இட்டுவைக்கும்
ஜீரணித்ததன் அடையாளமாய்’
மேற்சொன்ன கவிதையில் விளக்கு நோக்கிப் பாயும் வெள்ளந்தி ஈசலையும், அதை உண்டு எச்சமிடும் தாழ்வாரக் குருவியையும் மனம் பல தளங்களில் விரித்துக்கொள்கிறது. இக்கவிதையில், ஒளி நோக்கிப் பாய்வது மடைமையாகப் புலப்படுவதுபோல் மற்றொரு கவிதையில் ஈரம் என்பதையும் பொதுவான நேர்மறைச் சித்தரிப்பிலிருந்து விடுவித்துத் தலைகீழாக்குகிறார். ‘உன் சிறு தேகம் சிக்கிக்கொள்ள/ சிறு ஈரம் போதும்/ ஊசி நுனி ஈரம் போதும்/ உன் சிறகுகளைச் சிறைப்படுத்த’ எனத் தொடங்கும் கவிதை ‘உன் கதைதான் என் கதையும்/ ஈரத்தில் விழுந்தால்/ எதுவும் மீள முடியாது போலும்/ விதை வேர் நீ நான் உட்பட.’ என முடிகிறது. ஈரம் யாவற்றையும் கரிசனத்துடன் முளைக்கவைப்பது. ஆனால், அது இங்கு சிறைப்படுத்துவதாக ஆகிறது.
ஜீவிதனின் கவியுலகம் எரிந்தணையும் தீவிரமும் பதற்றமும் சூடியவை. ஜீவிதன் ஒரு கவிதையில் கவிதையை இறுகப் பற்றிக்கொள்வது தொடர்பான பதற்றத்தை ‘நான் செத்த பிறகு சாகாதிருக்கலாம் என் கவிதை/ நான் சாகும்வரை என் கவிதை சாகாமல் இருக்க வேண்டும் என்பதே என் கவலை’ எனப் பகிர்ந்துகொள்கிறார். கவிதையை இறுகப் பற்றிக்கொண்டதன் பலனை இத்தொகுப்பில் காண முடிகிறது. தாமதமான வருகை என்றாலும் குறிப்பிடத்தக்க வருகை என ஜீவிதனின் கவிதைகளைப் பற்றிச் சொல்லலாம்.
– சுனில் கிருஷ்ணன்
நன்றி: தமிழ் இந்து, 30/10/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818