வெள்ளத் தாண்டவம்

வெள்ளத் தாண்டவம், வரலாற்று மகா காவியம், நீதிபதி மு. புகழேந்தி, செல்லம் & கோ புத்தகப் பதிப்பாளர், பக். 300, விலை 300ரூ.

மரபுக் கவிதை எழுதுவது அருகிப் போன இக்காலத்தில், மரபுக் கவிதையில் ஒரு காவியமே படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால், அது உண்மை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த பெருமழை, ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, உடமைகள் இழப்பு இவற்றை மையப் பொருளாக வைத்து இந்தக் காவியம் படைக்கப்பட்டிருக்கிறது.

இன்று நமது வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வினை வருங்காலத் தலைமுறை தெரிந்து கொள்ள, உணர்ந்து கொள்ள இந்நூல் உதவும் என்பதில் ஐயமில்லை. பின்னிணைப்பாக வெள்ளம் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த வெள்ளப் பாதிப்புச் செய்திகளும் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை ஈக்காட்டுத் தாங்கல் தன்னில் இரண்டாம் மாடியதனிலே அடுக்ககத்தைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது, செம்பரம்பாக்கம் ஏரியதன் வெள்ளத்தோடு சுற்றியுள்ள நீர்நிலைகள் உடைப்பெடுத்தது, பெருங்களத்தூர் பெரிய ஏரி, முடிச்சூர் ஏரி போதாதென்று ஆலந்தூர் ஏரி உட்பட நிறைந்திட்ட நாற்பது ஏரிகளும் உடைப்பெடுத்தது, மதுரவாயல், திருவேற்காடு, வேலப்பன்சாவடி, கோயம்பேடு, அண்ணாநகர், அரும்பாக்கம் பகுதியெல்லாம் வெள்ளம் சூழ்ந்தது பற்றியெல்லாம் கவித்துவத்துடன் எழுதப்பட்டுள்ள வரிகள் நம் மனதை மயக்குகின்றன.

இந்தப் பகுதிகள் எல்லாம் “தரையெல்லாம் இழந்துவிட்டுத் தத்தளித்து… தடுமாறி உருமாறி ஓலமிட்டு… கரைகாணத் தவித்திட்ட துன்பத்தை’ப் பற்றி நூலாசிரியர் எழுதும்போது கவிதை வெள்ளம் கரைபுரண்டோடுவது என்னவோ உண்மை!

நன்றி: தினமணி, 24/10/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *