விநோத சந்திப்பு
விநோத சந்திப்பு (சீனத்துச் சிறுகதைகள்), இராம.குருநாதன், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.112, விலை ரூ.100.
13 சீனத்துச் சிறுகதைகள் ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.1937 -1945 கால கட்டத்தில் ஜப்பான் சீனாவை ஆக்ரமித்தது அந்த ஆக்கமிப்பை எதிர்த்து சீன மக்கள் போராடினார்கள். அந்தப் போராட்டம் சீன மக்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை காற்று, நெருப்பு விதை ஆகிய சிறுகதைகள் அற்புதமாகச் சித்தரிக்கின்றன.
கற்பனையும் கனவும் மட்டும் ஒரு பெண்ணுக்கு இருந்தால் போதாது, எந்தப் பொறுப்பையும் சிறப்பாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பதைச் சொல்லும் சாவிக் கொத்து சிறுகதை, சீனமக்களின் பேய் நம்பிக்கையைத் திகிலுடன் சொல்லும் விநோதச் சந்திப்பு, ஒரு நாடக நடிகையின் மீது மோகம் கொண்ட ஓர் ஆண், அந்த நடிகை முதியவளானபோது சந்தித்து, அவன் பல ஆண்டுகள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை அவளிடம் கொடுப்பதைச் சித்தரிக்கும் மோகம், குழந்தையுடன் சேர்ந்து இரவில் படுக்க இயலாமல் தந்தை இரவுப் பணிக்குச் செல்லும்நிலை உள்ளதைக் கூறும் மழலை, பல் விழாமல் நூறாண்டுகள் வாழ்ந்த கொள்ளுப்பாட்டி இறந்து போனால் பேயாக மாறிவிடுவாள் என்ற நம்பிக்கையால் அவளின் பற்களைப் பிடுங்கும் சந்ததிகளைப் பற்றிச் சொல்லும் கொள்ளுப்பாட்டி உள்ளிட்ட அனைத்து சிறுகதைகளும், சீனாவின் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்கிறவையாகவும், அந்தந்த காலகட்டங்களின் மக்களின் வாழ்க்கை, மனநிலை ஆகியவற்றைச் சித்தரிப்பவையாகவும் உள்ளன.
பிற மொழிக் கதைகள் என்று தோன்றாத வகையில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.
நன்றி: தினமணி, 25/11/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818