விதையாக இரு

விதையாக இரு, முன்னோர்கள் சொன்ன முன்னேற்றச் சிந்தனைகளின் தொகுப்பு, த.இராமலிங்கம், விகடன் பிரசுரம், பக்.224, விலை ரூ.210.

தமிழ் இலக்கியங்களில் நம் முன்னோர் கூறிச் சென்ற கருத்துகள் இன்றைய வாழ்வுக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதை விளக்கும் நூல்.தமிழின் அறநெறி நூல்களாகிய இன்னா நாற்பது, இனியவை நாற்பது, விவேகசிந்தாமணி, நீதி வெண்பா, திரிகடுகம், வெற்றி வேற்கை ஆகியவை மட்டுமல்ல, சங்க இலக்கிய நூலான புறநானூற்றிலும் கூறப்பட்டுள்ள வாழ்க்கைநெறிகள் நமது வாழ்வுக்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பதை இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.

முயற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கும் ஒளவையாரின் நல்வழிப் பாடல், முயன்றால் விதியையும் வெல்லலாம் என்பதை விளக்கும் பழமொழி நானூறு பாடல், வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம் என்பதைக் கூறும் வெற்றி வேற்கை பாடல், வறுமையின் கொடுமையைச் சொல்லும் விவேகசிந்தாமணி பாடல், நன்றியோடு வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இனியவை நாற்பது பாடல், கற்றவர் எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்லும் குமரகுருபரரின் பாடல் உள்பட வாழ்வதற்கான நன்னெறிகளைக் கற்றுத் தரும் பல தமிழ் இலக்கிய பாடல்களை எடுத்துக்காட்டி இந்நூல் விளக்குகிறது.

“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடல், தாயின், தந்தையின், கொல்லரின், வேந்தரின் கடமைகளைப் பற்றிக் கூறுகிறது. இறுதியில் இளைஞர்களின் கடமையாக “ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’ என்று கூறுகிறது.
அத்தகைய வாள் போன்ற ஆயுதங்களை ஏந்தி போர் நிகழாத இக்காலத்தில் இது எப்படிப் பொருந்தும் என்று யோசிக்கும் வேளையில் நூலாசிரியர், “ஒவ்வோர் இளைஞனும், வாழ்க்கையைச் சந்திக்கத் தனக்கான ஆயுதம் ஏந்தத் தயாராக வேண்டும். தான் விரும்பும் கல்வியில் உயர்ந்தநிலை; ஒப்பற்ற ஒழுக்கம்; பெரியோரை மதித்தல்; எதற்கும் அஞ்சாத அறச்சீற்றம்; எடுத்துக் கொண்ட பணியை சீர்மையாய் முடிக்கும் திறம்… இவை அனைத்தும் கலந்து ஒன்று திரண்ட பண்பு… இதுதான் அந்த ஆயுதம்’ என்று அதற்கு விளக்கம் தருகிறார்.

இவ்வாறு பழைய இலக்கியங்களை புதிய வெளிச்சத்தோடு பார்க்க உதவும் சிறந்த நூல் இது.

நன்றி: தினமணி, 2/8/21

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *