யுகபாரதி கவிதைகள்
யுகபாரதி கவிதைகள், நேர்நிரை, விலை 500ரூ.
யுகபாரதியின் ஏழு கவிதைத் தொகுப்புகளை ஒன்று சேர்த்து இறுக்கிய நூல். நல்ல கவிதைகள் பள்ளிக்கூடத்து பிள்ளைகள் மாதிரி ‘காச்மூச்’ சென கத்தக்கூடாது’ என்பார் நகுலன். அப்படியே சத்தம் இல்லாமல் யுகபாரதி கொண்டு சேர்க்கும் எளிமைக்கும், அர்த்தத்திற்கும் தேய் வழக்கற்ற சொல் ஆளுமைக்கும் கட்டியம் கூறுகின்றன கவிதைகள்.
அவரது கவிதைகளில் கண்டடையும் உண்மை என்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அவரின் கவிதைகளைத் தனித்தனியாக பார்க்கும்போதும் ஒவ்வொன்றிலும் ஒரு விசேஷமான பார்வை, கூர்மை, தெளிவு புலப்படுகிறது. எளிமையாக இருப்பதாலேயே இவை சாதாரணமானவை அல்ல.
அவரின் கவிதை சாயல்கள் இல்லாதது. அனுபவங்களை அணுகும் விதமும் பிரத்யேகமானது. கவிதையை வரையறுத்தல் சாத்தியமற்றது. வாழ்க்கையின் உண்மைகளை கவிதையின் மூலமாக திறப்பது, உணர்வது எளிதான காரியமில்லை. காலத்தின், அகத்தின், மனதை திறப்பவர்களை நாம் மறப்பதற்கில்லை.
அந்த விதத்திலும் யுகபாரதியை தள்ளி வைக்க இயலாது. மூடுமந்திரமாய், தொலைதூர உணர்வில் கண்டுபிடிக்கக்கூடிய பொருளில் சில கவிஞர்கள் எழுதுவார்கள். ஆனால் வருடிச் செல்லும் நுட்ப மொழியில் எளிமையான யுகபாரதியின் இந்தக் கவிதைகள் தமிழுக்கு முக்கியமானவை.
நன்றி:குங்குமம், 17/3/2017.