அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்
தூரன் கட்டுரைகள், பெ. தூரன், கவுதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை – 50, பக்கங்கள் 80, விலை 50 ரூ.
‘கற்ப காலத்தில் தூரக்குரல் கவிஞர்களின் நுட்பமான செவிகளில் இன்றே கேட்கிறது. மற்றவர்கள் நூற்றாண்டுகளுக்குப் பின் அறிந்து கொள்வதை, அவர்கள் இன்றே அறிந்து சொல்கிறார்கள்’ (ஹோம்ஸ்). ‘அப்பொழுதே உணராமற்போனோமே என்று வருந்தும் நிலை ஏற்படுவதற்கு முன்பே உலகம், காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி உய்வடைய வேண்டும்’ (ஐன்ஸ்டைன்), இப்படிக் கட்டுரைகள் தோறும் பல அறிஞர்களின் மேற்கோள்களுடன் எழுதப்பட்ட தூரனின் 15 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை கவிதையை மையமாகக் கொண்டவை. ‘இரண்டு செயல்களிலே எனக்கு அளவு கடந்த விருப்பமுண்டு. நல்ல கவிதைகளைப் படிப்பது ஒன்று. தனியாக உலாவச் செல்வது மற்றொன்று’ என்று கூறும் ஆசிரியர் ‘காட்டு வெளியினிலே தனியாகக் கால்போன போக்கில் திரியும்போது வாழ்க்கையிலே கசப்பூட்டும் சிறிய செயல்கள் மறந்து போகின்றன. உள்ளம் விரிந்து உயரப் பறக்கின்றது என்ற அனுபவ வெளிப்பாடுகள் மூலம் கட்டுரைகளுக்கு இனிமையையும், இலக்கியத்திற்கு வலிமையையும் சேர்த்துள்ளார். – பின்னலூரான்
—
ஆய்வு மாலை, பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், முனைவர் ஹ.மு.அகமது மரைக்காயர், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம், 8, தம்பி சாயபு மரைக்காயர் வீதி, காரைக்கால் – 609602, பக்கம் 608, விலை 350 ரூ.
தமிழ் வளர்க்கும் பணியில், இஸ்லாமியர்கள் பெருந்தொண்டு புரிந்துள்ளனர் என்பதை இந்நூல் வாயிலாக அறியலாம். இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகத்தின் இவ்வரிய தொண்டினைப் பாராட்டி மகிழலாம். இந்நூலில் 101 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமியப் பண்பாடு, இஸ்லாம் மார்க்கத்தின் சீரிய நெறி, இந்திய விடுதலைப்போரில் இஸ்லாமியர் பங்கு, இஸ்லாத்தில் வாழ்வியல் சிந்தனைகள் என்று பல தலைப்புகளில் இனிமையான பயனுள்ள கட்டுரைகள், இந்நூலில் உள்ளன. இஸ்லாம் சமயத்தை நன்குணர இந்நூல் பெரிதும் உதவும். அனைவரும் படிக்கவேண்டிய நூல். – டாக்டர் கலியன் சம்பத்து
—
அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம், கோமதி நடராஜன், மணிமேகலைப் பிரசுரம், 7 (ப,எண். 4) தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை – 17, பக்கம் 84, விலை 40 ரூ.
மனிதர்களை வாசித்து எழுதிய ஆசிரியர் வாழ்க்கைக்குத் தேவைப்பட்டதை எழுதியிருக்கிறார். அதில் அண்டி வந்து கேட்டால் ஒழிய அறிவுரை வழங்காதீர்கள் என்பது இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற தகவல். அதேபோல அறுபதைக் கடந்தவர்களுக்கு தரும் ஆலோசனைகளில், ‘அடுத்தவருக்கு உதவும் வகையில் நாம் இல்லாமல் போகலாம். ஆனால் அடுத்தவரைச் சிரமப்படுத்தாமல் இருப்பது எந்த வயதிலும் இயலக்கூடிய காரியம்தான்.’ இப்படி நல்ல தகவல்கள் பல உள்ளன.