செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.ஜான் சாமுவேல், முல்லை நிலையம், பக். 172, விலை 120ரூ.

தமிழ்மொழி செம்மொழி மதிப்பை அடைந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த உயரிய அடைதலுக்காக மேற்கொள்ளப்பட்ட அரிய முயற்சிகள் என்ன, அதற்காக சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வறிக்கைகள் என்னென்ன என்பதைப் பற்றிய வரலாற்று விபரங்களைத் தருகிறது இந்நூல்.

நம் பண்டைய புலவர்கள் தமிழைச் செவ்வியல் நிலையிலேயே வளர்த்து அதைச் செந்தமிழ் என்று அழைத்து வந்தனர். செவ்வியல் எனும் சொல்லை, ரோமானியர்கள் பெரும்பாலும் உயர்தரமான இலக்கியப் படைப்புகளை சுட்டப் பயன்படுத்தியிருக்க, கிரேக்க இலத்தீன் மொழியிலான செம்படைப்புகளைக் குறிக்கும் பொதுவான சொல்லாக இது விளங்கியது.

எந்த ஓர் இலக்கியத்தின் ஒரு பகுதியை அவ்விலக்கியத்தின் முழுமைக்கும், கலைச்சிறப்புக்கும் ஊறு ஏற்படாமல் எடுக்கவோ, இணைக்கவோ முடியாதோ அதைச் செவ்வியல் இலக்கியம் என்று குறிப்பிடலாம் என்பர்.

அவயவிக் கோட்பாட்டின்படி ஓர் இலக்கியத்தின் எல்லாப் பகுதிகளும் ஒன்றையொன்று தழுவி, ஒன்றிலிருந்து ஒன்று பிரியாவண்ணம் இயைந்து நிற்க வேண்டும். ஒழுங்கும் இயைபும் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளைத் தழுவிச் செல்லும் பாங்கும் செவ்வியல் இலக்கியங்களின் அடிப்படைப் பண்புகள்.

தமிழின் செவ்வியல் நெறியை விளக்கும் நுாலாசிரியர் டாக்டர் ஜான் சாமுவேல், தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்புகள், நடுவுநிலைமை, பல மொழிகட்கும் தாயென அமைந்த தன்மை, மேம்பட்ட இனத்தின் பண்பாடு மற்றும் கலை அனுபவ உணர்வுகளின் முழு வெளிப்பாடாக இலக்கியங்களை பெற்றிருத்தல், தனித்து இயங்கும் ஆற்றல், இலக்கிய வளம், பண்பட்ட சிந்தனைகள், மொழிக்கோட்பாடுகள் ஆகிவற்றின் நோக்கில் தமிழ்மொழி தொன்றுதொட்டே செம்மொழிக் கூறுகள் கொண்டு விளங்கியதைக் குறிப்பிடுகிறார்.

உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழும் இடம்பெற, 1898-ல் பரிதிமாற்கலைஞர் துவங்கி, 100 ஆண்டுகளுக்கு மேலாக அறிஞர்கள் பலரும் விவாதித்ததைக் குறிப்பிட்டு, செம்மொழி வரிசையில் தமிழ் இடம்பெறுவதற்காக மொழி அறிஞர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலவற்றையும் விரிவாக விளக்குகிறார். செம்மொழி வரலாற்றை அறிய விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.

– மெய்ஞானி பிரபாகரபாபு

நன்றி: தினமலர், 3/11/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *