நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்
நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும், உ.வே. சுவாமிநாதையர், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 194, விலை 100ரூ.
நூலாசிரியரின் இருநூல்கள் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. பன்னிரண்டு சிறிய வரலாறுகள் அடங்கியது நான் கண்டதும் கேட்டதும் தொகுப்பு. இதில் தனிப்பாடல்கள் சிலவற்றைப் பற்றிய வரலாறுகள் சில. சரித்திர சம்பந்தமானவை சில. முள்ளால் எழுதிய ஓலை என்ற கட்டுரை தினமணி பாரதி மலரில் வெளிவந்தது. மருது பாண்டியரின் பரோபகாரச் சிந்தையையும் தம் குடிகளை தாய்போல் காப்பாற்றும் பாங்கையும் இக்கட்டுரை எழுத்தாளுமையுடன் எடுத்துரைக்கிறது. இக்கட்டான நேரத்தில் தங்க இடமளித்து பசிக்கு பழைய சாதமும் அளித்த மூதாட்டிக்கு அவள் வசித்த கிராமத்தையே அளித்த மருதுபாண்டியரின் செயல் வியக்கத்தக்கது. பன்னிரண்டு சிறிய கட்டுரைகளும் நாம் அறிந்திராத பல்வேறு விஷயங்களின் தகவல் களஞ்சியமாக உள்ளன. இதே தொகுப்பில் புதியதும் பழையதும் என்ற தலைப்பில் இருபது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பத்து ஏற்கெனவே பிரசுரமானவை. என்றும் மீதி பத்து புதிதாக எழுதப்பட்டவை என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். புலமை மிக்க அறிஞர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களும் படித்து இன்புறத்தக்க சிறந்த நூல்களை அளித்த சிறந்த எழுத்தாளர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் என்பதை இத்தொகுப்பு நிரூபிக்கிறது. நன்றி: தினமணி, 7/9/2015.