எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும்

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும், முனைவர் ஆ.புஷ்பா சாந்தி, பக்.279, விலை ரூ.280.

சங்க இலக்கியங்களை அணுகப் பண்பாட்டுச் சூழலியல் பெரிதும் துணை புரிகிறது. தற்போது பல துறைகளிலும் சூழலியல் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம், சங்க காலமும் சரி, பண்டைத் தமிழ்ச் சமூகமும் சரி இயற்கையோடு இயைந்த வாழ்வையே கொண்டிருந்தது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் செழிக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் சூழலியல் கோட்பாட்டாளர்கள்.

தற்போது உலகம் பல பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. பேரிடர்களை எதிர்கொள்ளும்போதுதான் சுற்றுச்சூழல் குறித்து மக்கள் சிந்திக்கவும் செயல்படவும் தொடங்குகிறார்கள். மனிதச் சமூகம் இயற்கையிடமிருந்து எண்ணற்ற நடத்தை முறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெற்று வந்துள்ளது. இன்றைக்குப் பண்பாட்டு சூழலியல் குறித்த ஆய்வும் புரிதலும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அத்தேவையை இந்நூல் ஓரளவுக்குப் பூர்த்தி செய்திருக்கிறது.

சங்க இலக்கியங்களில் சுற்றுச்சூழல் குறித்த பல தரவுகள் உள்ளன. சூழலியல் புரிதலுக்கு அடைப்படையாக தொல்காப்பியத்தில் திணைசார் மரபுகளில் உள்ள முதற்பொருளும், கருப்பொருளும் அமைகின்றன. எட்டுத்தொகை இலக்கியங்களில், சார்ந்திருத்தல், தன்வயப்படுத்துதல், பிரதிபலித்தல் போலச்செய்தல் ஆகிய கருத்தாக்கங்களின் அடிப்படையில் பண்பாட்டுச் சூழலியலை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் இந்நூல் ஆராய்கிறது.

பின்னிணைப்பில் உள்ள அட்டவணைத் தரவுகள், புள்ளிவிவரங்கள் குறிப்பிடத்தக்கவை. இலக்கியப் பண்பாடு, சமூகப் பண்பாடு, அவற்றை எடுத்துரைக்கும் சங்கப் பாடல்கள் பற்றிய குறிப்புகள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. இவை சூழலியல் குறித்து மேலாய்வு செய்வோருக்குப் பெரிதும் 
பயன்படும்.

நன்றி:தினமணி, 8/3/21

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031266_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.