ஹாஸ்ய வியாசங்கள்

ஹாஸ்ய வியாசங்கள், பம்மல் சம்பந்த முதலியார், சந்திரா பதிப்பகம், பக். 64, விலை 50ரூ.

தமிழ்நாடகத் தந்தை என்று புகழப்படும் மறைந்த பம்மல் சம்பந்த முதலியாரின் நகைச்சுவைத் திறனுக்கு, பிற்காலத்தில் திரைப்படமாகவும் வெளிவந்த ‘சபாபதி’ மிகச் சிறந்த சான்று. அவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பான ஹாஸ்ய வியாசங்கள் (முதல் பதிப்பு 1937) தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது.

12 கட்டுரைகள் கொண்ட சிறிய புத்தகம்தான். ஆனால் நகைச்சுவை வீரியம் அதிகம். தண்ணீர் இல்லாத நீச்சல்குளம் (அக்காலத்திலும் இப்படித்தானா?) உள்ளிட்ட சென்னையின் விநோதங்களை முதல் கட்டுரை வஞ்சப் புகழ்ச்சியாக எடுத்துரைக்கிறது.

பத்து ரூபாய் சலுகை விலை ரயில் டிக்கெட்டை வாங்கி, ரயிலுக்குள் படுகின்ற பாட்டை, ரசிக்கும் வகையில் கூறுகிறது 2வது கட்டுரை. அதிர்வெடியூர் செவிடர்கள் கதை. அங்கு மாலும் நை சாயபு கதை ஆகியவை இன்றைய சினிமாக்களுக்கும் தீனி போடும். ஆஸ்பத்திரி விசாரணை, சகுனம் பார்த்த கதை ஆகியவற்றின் கிளைமாக்ஸ், வெடிச் சிரிப்பை வரவழைக்கும்.

வயதைக் குறைத்துக் கூறும் சந்தர்ப்பங்கள் தொடர்பான கட்டுரையும் தீண்டாமை குறித்த கட்டுரையும் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டுகின்றன. எழவு என்ற வார்த்தையை விட முடியாத ஒரு கிராமத்தினர் குறித்த ‘சுபவார்த்தை’ கட்டுரை ஆகியவை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. ‘தமிழ் மாது படும் கஷ்டம்’ இக்காலத்துக்கும் பொருந்தும்.

அக்கட்டுரையில் ‘ர’ என்ற எழுத்தை மெல்லினம் என்று குறிப்பிட்டிருப்பது ஆசிரியரின் கவனக்குறைவா அல்லது பதிப்பகத்தாரின் பிழையா? அக்கால சமூகத்தை எளிய தமிழில் நகைச்சுவை இழையோட நமக்குப் படம் பிடித்துக் காட்டும் ஹாஸ்ய வியாசங்கள், இக்காலத் தமிழர்கள் படிக்க வேண்டிய நூல்களில் ஒன்று.

நன்றி: தினமணி, 11/4/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *