பொன்னகரம்

பொன்னகரம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 264, விலை 230ரூ.

மண் வாசனை என்று வரும்போது சென்னையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த நகரம், பல்வேறு ஊர்கள், மாநிலங்களைச் சேர்ந்த மக்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. சென்னைக்குள் பல உலகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை சற்றே அணுகிப்பார்க்கும் முயற்சியில் அந்த உலகின் யதார்த்தம், அதன் நுட்பங்களோடு இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சினிமாவில் பார்த்திருந்த சென்னைக்கும் நேரில் காணும் காட்சிகளுக்கும் சம்பந்தமே இல்லாத பகவதிபுரம் என்ற இடத்துக்கு திருமணம் செய்து கொண்டு அத்தை மகன் முத்துக்கிருஷ்ணன் சகிதம், அழுக்கும் ஒழுங்கீனமும் நிறைந்த சிறிய வீட்டில் வலது காலை எடுத்து வைத்து குடிபுகுகிறாள் குடியாத்தம் பார்வதி. வளைகாப்பு முடிந்து சித்தி வீட்டுக்கு அவள் பிரசவத்துக்கு செல்வதாக முடிகிறது கதை.

‘பொன்னகரம்’ வெளியில் இருப்பவர்களுக்கு ஒரு சிறிய காலனி. ஆனால் அங்கு வாழ்பவர்களைப் பொருத்தவரை அது ஊர். அங்கு வசிப்பவர்கள் சென்னையின் வளர்ச்சிக்குத் தங்கள் வாழ்க்கையை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள். குற்றங்களும் உதிரித் தொழில்களும் மட்டுமல்ல, அவர்களது வாழ்க்கை, அவர்களுக்கும் உறவுகளும், லட்சியங்களும், முன்னேறும் ஆசையும் உண்டு என்பது நாவலின் அடிநாதமாக உள்ளது.

சாம்பல் நிறப் புகைக் கட்டிடத்தை விலக்கி அந்த ஊரின் தரிசனத்தை நூலாசிரியர் வாசகர்களுக்குக் காட்டியுள்ளார்.

நன்றி: தினமணி, 11/4/2016.

Leave a Reply

Your email address will not be published.