தெய்வத்தமிழ்
தெய்வத்தமிழ், மரு. பரமரு, பழனியப்பா பிரதர்ஸ், பக். 184, விலை 145ரூ.
தேவாரம் அருளிய சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரைப் பற்றியும், சைவ புராணங்களில் சிறப்பாகப் போற்றிப் புகழப்படும் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகிய படைப்புகளில் இறைவனின் திருவருள் பற்றியும், மகாகவி பாரதியாரின் தெய்வப் பாடல்கள், அன்னை காரைக்கால் அம்மையார் பற்றியும் அழகுற ‘தெய்வத் தமிழ்’ என்னும் இந்த நூல் எடுத்துரைத்துள்ளது.
கட்டுரை வடிவில் சமய ஆர்வலர்களும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் படித்துணரும் வகையில் அமையப் பெற்ற இந்த நூலில், முருகனைப் பற்றியும், அவனது திருவிளையாடல் பற்றியும், சுந்தசஷ்டி நோன்பு முறை குறித்தும், அவன் ஞானமாகிய வேலால், ஆணவ மலம், கன்ம மலம், மாயா மலம் ஆகிய மும்மலங்களையும் அழித்து, வீடுபேறு அளிக்கும் எழில் முதல்வனாக விளங்குவதையும் நூலாசிரியர் மிகைச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.
சுந்தரத் தமிழ் நிறைந்த இலக்கிய சோலைக்குள் நுழைந்து திரும்பிய உணர்வு இந்த நூலை படித்து நிறைவு செய்யும்போது எவருக்கும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. தமிழ் இலக்கிய ஆர்வம் கொண்டோர் அனைவரும் படித்து பாதுகாக்க வேண்டிய நூல் இது.
நன்றி: தினமணி, 11/4/2016.