கடைசி நமஸ்காரம்

கடைசி நமஸ்காரம்,சந்தோஷ்குமார் கோஷ், தமிழில் புவனா நடராஜன், சாகித்ய அகாதெமி, பக்.624, விலை ரூ.415.

சுயசரிதை முறையில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல் 1972-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது. வாழ்வின் நிறைகள், அவலங்களை தத்ரூபமாக சித்திரிக்கும் இந்தப் படைப்பு, எழுத்தாளனின் ஒற்றைச் சாளரம் வழியே வாழ்கையின் முழுப் பரிமாணத்தையும் பிரதிபலிக்கிறது. வாழ்க்கை வரலாறு என்றால் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளின் தொகுப்பு மட்டும் இல்லை என்பது ஆசிரியரின் வாதம். கொஞ்சம் வேதனை, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் தேடுதல், கொஞ்சம் உணர்ந்து கொள்ளுதல்,கொஞ்சம் புரிந்து கொள்ளுதல் இவையும் வாழ்க்கைதானே? என்று வினா எழுப்பும் அவர்
அதற்கான விடையையும் நூலில் தந்துள்ளார்.

கதை நாயகனிடம் அவனது மாமா, “மனிதன் சுகம், துக்கம் இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறான். துக்கம் என்பது குளிர், சுகம் என்பது போர்வை என்பதாக நினைத்து அந்த போர்வைக்குள் போக விரும்புகிறான். குளிரிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமானால் முழுக்குப் போடு; ஒரு முறை மூழ்கிவிட்டால் குளிரே இருக்காது’ என்று
கூறுவது யதார்த்தமானது. ஆழ்ந்த வாசிப்புக்குரியதான இந்த நாவல் வாசிப்பின் வழியே நமக்கு நிறைந்த அனுபவ அறிவை அளிக்கிறது என்றால் மிகையல்ல. மொழியாக்கம் செய்துள்ளவர் 2009-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்புப் பரிசினை வென்றுள்ளார்.

இருபதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ள அவரது
ஆற்றல் இந்தப் படைப்பிலும் மிளிர்கிறது.

நன்றி : தினமணி, 25/4/2016.

Leave a Reply

Your email address will not be published.