கவி காளிதாசரின் மகா காவியங்கள்
கவி காளிதாசரின் மகா காவியங்கள், சி.எஸ். தேவநாதன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 496, விலை 350ரூ.
வால்மீகி ராமாயணம், மகாபாரதம், திருமந்திரம், உபநிடதம் பேசும் உண்மை போன்ற குறிப்பிடத்தக்க நூல்களை எளிய உரைநடையில் அளித்த இந்நூலாசிரியர், இதுவரை 300 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவற்றில் ‘நம் தேசத்தின் கதை’ என்ற நூல் 2013 ல் தமிழக அரசின் விருதைப் பெற்றது. அந்த வகையில் இந்நூலில் கவி காளிதாசர் இயற்றிய உலகப் புகழ்பெற்ற மகா காவியங்களான மேகதூதம், குமார சம்பவம், ரகுவம்சம், அபிஞான சாகுந்தலம் ஆகிய நான்கு காவியங்களை உரை நடையாக எளிய தமிழில் தந்துள்ளார்.
தமிழகத்தில் கவிச் சக்கரவர்த்தி கம்பருக்கு இருக்கும் புகழைப் போன்று, வட மாநிலங்களில் மகாகவி காளிதாசருக்கும் மிகப் பெரிய சிறப்பு உண்டு. இவர் கி.மு. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்றும் இவர் பிறப்பு மற்றும் வாழ்ந்த காலங்கள் குறித்து பல முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. இந்நூலில் முதல் 40 பக்கங்களுக்கு மேலுள்ள காளிதாசரின் வாழ்க்கைச் சரித்திரச் சுருக்கமே, படிக்க விறுவிறுப்பாக உள்ளது. அதைத் தொடர்ந்து அவர் இயற்றிய நான்கு காவியங்களின் தமிழ் உரைநடை மனதைக் கொள்கை கொள்கின்றன.
முதல் காவியமான மேகதூதத்தில், குபேர மன்னனிடம் பணியாற்றிய ஒரு யட்சன், அவன் புரிந்த தவறுக்காக நகரை விட்டு விலக்கி வைக்கப்படுகிறான். அவனோ தன் காதலியைப் பிரிய நேரிட்டதை எண்ணி மனம் கலங்குகிறான். இந்தச் சிறிய நிகழ்வைக் கொண்டு இந்தக் காவியத்தைஇயற்றியுள்ளார் காளிதாசர். இதுபோல் இதிலுள்ள ஒவ்வொரு காவியமும் படிப்பவரின் மனதை கவரும் விதமாக உள்ளன. இவற்றை இந்நூலில் எளிய தமிழ் உரைநடையில், இந்நூலாசிரியர் மொழி பெயர்த்துள்ளது பாராட்டத்தக்கது.
-பரக்கத்
நன்றி: துக்ளக், 28/8/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026614.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818