மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்
மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள், தமிழில்: என்.ஸ்ரீநிவாசன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.216, விலை ரூ.180.
கி.பி.121 இல் ரோமாபுரியில் பிறந்தவர் மார்கஸ் அரேலியஸ். கி.பி.161 – இல் மன்னரானார். அவர் எழுதி வைத்த சிந்தனைகள் நூல் வடிவம் பெற்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழில் ராஜாஜியால் ஆத்ம சிந்தனைகள் என்ற பெயரிலும், பொ.திரிகூடசுந்தரத்தால் இதய உணர்ச்சி என்கிற பெயரிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஏற்கெனவே வெளி
வந்திருக்கிறது.
உலக வாழ்க்கை, மனித சிந்தனை, பிரபஞ்ச இயக்கம் ஆகியவை குறித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர் வெளியிட்ட கருத்துகள் பல, இன்றைக்கும் பொருந்துவதாக, சிந்தனைக்குரியதாக இருப்பது சிறப்பு.
எல்லாமே ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. அவற்றின் பிணைப்பிலே ஒரு புனிதம் இருக்கிறது. ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படாததாக இந்த உலகில் எதுவுமே இல்லை… இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்துதான் பிரபஞ்சத்தை உருவாக்கி இருக்கின்றன என்று மார்கஸ் அரேலியஸ் கூறுவது இன்றைய உலக நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது. நவீன அறிவியல் சிந்தனைமுறையோடு அது ஒத்திசைந்து போவதாகவும் உள்ளது.
நீ எது ஒன்றைப் பற்றியாவது விசனப்பட்டுக் கொண்டிருக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். நீ ஒன்றை மறந்துவிடுவாய் அல்லது எல்லா நிகழ்வுகளுமே ஏதோ ஒரு பிரபஞ்சவிதிப் பிரகாரம் நடக்கின்றன என்பதை மறந்துவிடுகிறாய் எனக் கூறுவதில் பிரபஞ்சவிதி என்பதைக் கடவுள் என்று புரிந்து கொள்பவர்கள், எல்லாம் கடவுள் செயல் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்துவிட வாய்ப்புண்டு.
இயற்கை விதித்த பிரகாரம் நடப்பனவற்றிற்கெல்லாம் நாம் கடவுளைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. ஏனென்றால் கடவுள் தானாகவோ அல்லது தன்னிச்சையில்லாமல் எந்தத் தீங்கையும் செய்வதில்லை. ஆகவே நாம் எவரையும் பழிப்பதற்கில்லை என்ற அவருடைய கருத்தும் குறிப்பிடத்தக்கது.
சமகால வாழ்க்கையை மார்கஸ் அரேலியஸின் சிந்தனையைக் கொண்டு விளங்கிக் கொள்ள முடிவதே பெரிய விஷயம். இந்த நூலின் பலம்.
நன்றி: தினமணி, 17/12/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818