தமிழில் விமர்சனக் கலை – விமர்சனத்தின் எல்லைகள்

தமிழில் விமர்சனக் கலை – விமர்சனத்தின் எல்லைகள், எம்.ஆர். ரகுநாதன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 104, விலை 65ரூ.

இலக்கிய விமர்சனம் குறித்த ஆழமான கருத்துகள் அடங்கிய நூல். எவ்வாறு விமர்சனம் அமைய வேண்டும்? என்பதை விளக்கும் நூலாசிரியர், கலை, இலக்கியங்களின் தோற்றம், இலக்கியம் படைப்பவரின் அனுபவம், அறிவு, அவருடைய வாழ்க்கைப் பார்வைக்கும், இலக்கியத்துக்கும் இடையிலான உறவு, இலக்கியத்தின் உள்ளடக்கத்துக்கும் அதன் வடிவத்துக்குமான தொடர்பு, ஓர் இலக்கியம் உருவான காலம், சமூகப் பின்னணி, வாசகர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இலக்கிய விமர்சனம் அமைய வேண்டும் என்கிறார்.

தமிழில் இலக்கிய விமர்சனங்கள் தோன்றி வளர்ந்தது வ.ரா., கு.ப.ரா., க.நா.சு., வெங்கட்சாமிநாதன் போன்றோரின் இலக்கிய விமர்சனங்களின் தன்மை, தொ.மு.சி. ரகுநாதன், கு. கைலாசபதி, சிவத்தம்பி, நா. வானமாமலை, தி.க.சி. ஆகியோரின் விமர்சனப் பங்களிப்பு ஆகியவற்றையும் எடுத்துரைக்கிறார். வெறும் ரசனை சார்ந்ததாக இருந்தது, அழகியல் சார்ந்ததாக இருந்தது, உள்ளடக்கம் சார்ந்ததாக இருந்தது, அமைப்பியல் சார்ந்து அது வளர்ந்தது என இலக்கிய விமர்சனங்களின் பன்முகத்தன்மைகளும் இந்நூலில் விளக்கப்பட்டிருக்கின்றன.

‘கலை இலக்கியங்கள் சமுதாயத்தின் விளைபொருள்கள். அவை வெறும் கலை, கலைக்காக அல்ல. மக்களுக்குப் பயன்பாடுடையவையாக இருத்தல் வேண்டும்’ என்ற அடிப்படையில் இலக்கியத்தை அணுக வேண்டும் என்பதே நூலாசிரியரின் கருத்து. சிறிய நூலாயினும் சிறந்த நூல்.

நன்றி: தினமணி, 20/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *