தேனீ வளர்ப்பு
தேனீ வளர்ப்பு, பி.மாரியப்பன், இயல் வெளியீடு, பக் – 134, விலை ரூ.100.
இந்தியா மற்றும் பிற நாடுகளில் தேனீ வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கும் இந்நூல், தேனீக்களின் வகைகளை அவற்றில் இருக்கும் சுவாரஸ்யங்களை அழகாக விவரிக்கிறது. மனிதர்களின் உறுப்பு மண்டலம் போல் தேனீக்களின் உறுப்புகளை, அவற்றின் செயல்பாடுகளைத் தெளிவாக விளக்கிக் கூறுகிறது.
மேலும் மனிதர்கள் குடும்பமாக வசிப்பது போல் தேனீக்களும் இராணி தேனீ, ஆண் தேனீ, வேலைக்கார தேனீ என்று கூட்டமைப்புடன் செயல்படுகின்றன என்பதை அழகாக விவரிக்கிறது.
நூலின் முதல் பாதி தேனீக்களைப் பற்றியும், பிற பகுதிகளில் தேனைப் பிரித்தெடுப்பது, அதிலுள்ள சிரமங்கள், தேன் மூலம் கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றைப் பற்றி எடுத்துக் கூறுகிறது.
தேனில் 300 வகைகள் உள்ளன என்பது மிகவும் அரிதான செய்தி. மேலும் அதில் குறிப்பிட்ட சில வகைகளைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளன.
மனிதர்கள் வைரஸ் தாக்குதலை எதிர்கொள்வது போல் தேனீக்களும் புழுக்களால் தாக்கப்படுகின்றன. குறிப்பாக என்னென்ன நோயினால் தேனீக்கள் பாதிக்கப்படுகின்றன என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
தேனீக்களுக்கு அவற்றின் எதிரிகளால் ஏற்படும் பாதிப்புகளையும் அலசுகிறது. பொருளாதாரத்தில் தேனீக்களின் பங்கு என்ன என்பதையும் விளக்கியுள்ள நூலாசிரியர், தேனீ வளர்ப்பில் அதிக நேரம் செலவிட தேவையில்லை; தேனீ வளர்ப்பானது மனச்சோர்வினை நீக்கி மகிழ்ச்சியையும் ஆத்ம திருப்தியினையும் தரக்கூடியது என்று குறிப்பிட்டுள்ளார். தேனீ வளர்ப்பானது லாபகரமான கிராமத் தொழிலாகும் என்பதை விளக்கும் வகையில் நூலின் இறுதியில், தேனீ வளர்ப்பதற்கான செலவினங்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையும் கூறியுள்ளார். தேனீ வளர்ப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நூல்.
நன்றி: தினமணி,13-04-2020
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818