விளிம்புக்கு அப்பால்
விளிம்புக்கு அப்பால் (புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: பொன்.வாசுதேவன், அகநாழிகை பதிப்பகம், பக்.160, விலை ரூ.140
பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகளின் தொகுப்பு. 22 வயதிலிருந்து 35 வயகுக்குட்பட்டவர்கள் எழுதிய கதைகள் இவை என்பதை நம்ப முடியவில்லை.
வங்கியில் வேலை செய்யும் அப்பா, பிறருக்கு புத்தகங்களை விற்பவராக இருந்திருப்பதன் ரகசியத்தை அவர் மறைவுக்குப் பிறகு தெரிந்து கொள்ளும் மகனின் பார்வையில் சொல்கிறது அப்பாவின் ரகசியம் சிறுகதை. திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்காரனோடு வாழும் ஒருவர், வேலைக்காரனுக்கு திருமணம் செய்வதற்காக எல்லாச் சொத்துகளையும் வேலைக்காரனின் பெயரில் எழுதி வைத்துவிட்டு திடீரென இறந்துவிடுவதும், அந்த மரணத்துக்கு வேலைக்காரனின் மனைவியின் பழிவாங்கலே காரணமாக இருப்பதும் நின்று கொல்லும் கதையில் சித்திரிக்கப்படுகிறது.
வேறு சாதிப் பெண்ணை காதலித்த ஒருவன், அவளைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். மனிதர்களின் மனதில் சாதி வெறி எரிந்து கொண்டிருப்பதைச் சித்திரிக்கும் டிரங்குப் பெட்டி புகைப்பட பெண் சிறுகதை, நெஞ்சை உலுக்குகிறது.
பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதாக கனவு காணும் ஒருவனின் கதையான மாயபுரி கதையைத் தாண்டி சொல்லும் செய்திகள் நிறைய.
இக்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் விதிவிலக்கான ஆண்- பெண் உறவு சார்ந்த கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. இத்தொகுப்பு முழுக்க உள்ள சிறுகதைகளைப் படிக்கும்போது, இளம் வயதினர் வாழ்க்கையை இந்த அளவுக்குக் கூர்ந்து நோக்குவதும், இலக்கியத்தரமிக்க மொழிநடை அவர்களுக்குக் கைவந்திருப்பதும் வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.
நன்றி: தினமணி, 19/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818