அல்லிக்கேணி
அல்லிக்கேணி, ராம்ஜீ நரசிம்மன், எழுத்து பிரசுரம், பக். 249, விலை ரூ. 270.
திருவல்லிக்கேணியின் காட்சியமைப்பை நம் முன் நிறுத்துவதில் தொடங்கி கால மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடும் வாழ்க்கையின் பரிமாணங்களை இந்நாவல் விவரிக்கிறது. நாம் நமது பால்ய பருவத்தில் விரும்புகிற ஒவ்வொரு சாகசத்தையும் அதனைத் தொடர்ந்து அடையும் பருவ மாற்றத்தையும் தன் எழுத்தில் சலிப்பு இல்லாமல் கொண்டு வந்து தந்திருக்கிறார் எழுத்தாளர் ராம்ஜீ நரசிம்மன்.
நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் எட்டிப்பார்க்கும் நையாண்டித் தனம் வாசகர்களைக் கட்டிப்போட்டு அழைத்துச் செல்கிறது. தேர்ந்த கதையமைப்பு, நேர்த்தியான கதாபாத்திரங்கள், எளிய மொழி நடை ஆகியவை நாவலுக்கு வலுசேர்த்துள்ளன. மிக எளிமையாக சட்டென்று மின்னி மறையும் ஆழமான வரிகள் வழக்கமான நாவலில் இருந்து அல்லிக்கேணியை உயர்த்திக் காட்டுகிறது.
அல்லிக்கேணியில் வரும் ஏதேனும் ஒரு கதாபாத்திரம் அல்லது சம்பவத்தை நம் வாழ்விலும் நாம் சந்தித்திருப்போம். ஒரு புத்தகம் எந்த அளவு நமது கைகளை இறுகப் பிடித்து அழைத்துச் செல்கிறதோ அந்த அளவு அதன் எழுத்தாளர் நம்மில் நிலைகொள்கிறார். அல்லிக்கேணி என்கிற இந்த நாவல் அந்த வகையில் நம்மை அழைத்துச் செல்லும் தூரம், நம்மில் பல நினைவுகளைத் தட்டி எழுப்பி விடுகிறது. நாம் தவற விட்ட அதே சமயம் நினைத்து உருகுகிற ஒரு வாழ்க்கையை நம்மில் சிமிட்டலாய் தட்டி விடுகிறது.
எளிய நடையில் இருக்கும் இந்த நாவல் எழுத்தாளரின் முதல் நாவல் என்பதை சற்று நம்பக் கடினமாக இருக்கிறது. நாவலின் இடையிடையே நாம் சற்று நின்று நம் வாழ்வின் நினைவலைகளைக் கொஞ்சம் அசைபோட்டுக் கொள்வதில் எழுத்தாளரின் வெற்றி அடங்கியிருக்கிறது.
நன்றி: தினமணி, 15/2/2021.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031021_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818