விட்டு விடுதலையாகி

விட்டு விடுதலையாகி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன், தபால்பெட்டி எண்-6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17.

பாரதி தன் மனைவியைப் பார்த்துப் பாடியதாகக் கூறப்படும் பாடலின் தொடக்கம்தான் புதினத்தின் தலைப்பு. பல தலைமுறைகளுக்கு வேதனையும் அவமானமும் அனுபவித்த ஒரு குலத்தினரைப் பார்த்து, சிட்டுக்குருவியுடன் ஒப்பிட்டு பாரதி ‘விட்டு விடுதலையாகி நிற்பாய்’ என்று தார்மீக கோபத்துடன் ஆலோசனை கூறியிருக்கக்கூடும்தான். நாயகி கஸ்தூரி வாழ்வின் இறுதிக் கட்டத்தில் கிடக்கிறாள். அவங்க இறந்துட்டாங்கன்னா சாமி (இறைவன்) தீட்டு பார்க்கணும்கிறீங்களா? என்ற கோயில் காவலாளியின் கேள்விக்கு, ஆமாம் பெண்டாட்டி செத்தா தீட்டு காக்கற மாதிரி என்ற குருக்களின் வாக்கியத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் தன்மை புதினத்தில் அறிமுகமாகிறது. கஸ்தூரி தாசி குலத்தில் பிறந்தவள். புதினத்தின் தொடக்கத்திலேயே தன் குலுத்தை மறுதலிக்கும் வகையில் கலகக் குரல் எழுப்புகிறாள் சிறுமி லட்சுமி. தன் புரட்சிப் பாதையை தானே தேர்ந்தெடுக்கும் தைரியம் அவளுக்கு இருக்கிறது. புதினத்தின் இடைப்பகுதியில் முக்கியத்துவம் பெறும் திலகமும் தன் பாதையை தானே தேர்ந்தெடுக்கும் தைரியம் கொண்டிருக்கிறாள். இருவருமே தங்கள் குலத்தை ஒதுக்கும் முயற்சியில் செயல்படுகிறார்கள். ஆனால் சுயமாக நிற்க விழையும் தன்மையும் சார்ந்து நிற்கும் பாதையும் வேறு என்பதால் விளைவுகளும் நேரெதிராக அமைகின்றன. மௌடிகமான துளசி, மகளின் வழக்கமில்லாத வழக்கமான கல்கி, மருத்துவப் படிப்பு போன்ற கோரிக்கைகளை உடனுக்குடன் ஏற்றுக்கொள்ளும் மிராசு ஆகியோரின் மகளாக சித்தரிக்கப்படும் லட்சுமி பாத்திரம் புரட்சியாளர் டாக்டர் முத்துலட்சுமியின் வார்ப்பு. இதன் காரணமாகவே கதைக்குரிய கற்பனை சுவாரசியங்களை அவரை வைத்து அதிகம் பின்ன முடியாமல் போவதை உணர முடிகிறது. வாசகனின் திறமை மீது வாஸந்தி கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பாராட்ட வேண்டும். மூன்று தலைமுறை சரித்திர நிகழ்வுகள். அவை அடுத்தடுத்து விளக்கப்படாமல் ஒன்றோடொன்று பின்னியபடி நகர்கின்றன. சில இடங்களில் ஒரே அத்தியாயத்தில் இருவேறு காலங்கள் இடம் பெறுகின்றன. ஒரு கதாசிரியராக கதையை மூன்றாம் நபர் கோணத்தில் விளக்கும் இந்தப் புதினத்தில் கதை மாந்தர்களில் ஒருத்தியே முதல் நபர் கோணத்தில் விவரிப்பதாகவு ஒரு தனி கதைப் பாதை இருக்கிறது. இவ்வளவு இருந்தும் தெளிவோடு கதையோடு ஒன்ற முடிகிறது என்பது எழுத்தாளரின் வெற்றிதான். தாசி சமூகம் என்றாலே கள்ள அந்தரங்க வாழ்வும் லயங்களில் ஆடப்பட்ட சதிர்க்காட்சியுமே பலர் மனதில் தோன்றும். ஆனால் மிராசுவின் விருப்ப நாயகி என்றாலும் தினமும் கொல்லைப்புறத்தில் நின்று யாசகம்போல் வீசிப் போடப்படும் உணவைப் பெற வேண்டிய கட்டாயம். சிங்காரத்தை விரும்பியும்கூட தனது போஷகரான ராஜாவை சரி செய்ய வேண்டிய கஸ்தூரியின் அவலம். தன் மேல்படிப்பு ஆசையை அம்மாவின் ரகசிய மணாளனிடம் பேசிவிட்டு நான் படுக்கப் போய்விடுகிறேன் என்று உறுதி அளித்துவிட்டு பேசத் தொடங்கும் லட்சமி. தாசி குல வாழ்வின் அவல நிதர்சனங்கள் அம்புகளாய் தைக்கின்றன. கஸ்தூரி லட்சுமி ஆகியோரைவிடவும் அந்த இரு துருவங்களுக்கும் இடைப்பட்டு உள்ள திலகத்தின் வாழ்வு மற்றும் சாவு அதிக அதிர்ச்சியை உண்டாக்குகிறது. கதைக்களனில் சுதந்திரப்போராட்டப் பின்னணி ஆங்காங்கே கதைக்கு வலு சேர்க்கும் விதத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. சிறுமி யோகு திருமணமானவுடன் கணவனை இழந்து, மழிக்கப்பட்ட தலை, நார் மடிப்புடவை என்று கோலம் தரித்திருப்பதைக் கண்டு லட்சுமி, என் குலம் படும் அவமானத்தைவிட இது அதிகக் கொடுமை என்று சாடுகிறாள். மையக் கதையுடன் வலிந்து திணிக்கப்பட்ட பாத்திரமாகக் தெரிந்தாலும், இதயமற்ற சமூகச் சூழல்களால், உயர்வாக நினைக்கப்ட்ட மற்றும் கேவலமாக நினைக்கப்பட்ட இரு ஜாதிகளிலுமே துவண்டு, புழுங்கிய பெண்கள் உண்டு என்பதை வெளிப்படுத்த இது உதவுகிறது. ஒரு குலத்தின் வேதனைகளும் குறைகளும் சட்டத்தின் மூலம் தீர்க்கப்படும்போது, அந்தக் குலத்தின் அற்புதங்களும் கலைத் திறமைகளும் அவர்கள் பரம்பரையினரால் வலிந்து விலக்கப்படுவதை என்ன சொல்ல? கலை வளர்ப்பதையே பாரம்பரியமாகக் கொண்ட ரத்தம் இன்று உறைந்து இறுகி எந்திர வாழ்வோடு ஐக்கியமாகிப் போனது துரதிஷ்டம்தான். புதினத்தைப் படிப்பவர்கள் பலவித அதிர்வுகளிலிருந்து விட்டுவிடுதலையாவது கடினம். நன்றி: இந்தியா டுடே, 1/11/13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *