இரவைப் பருகும் பறவை ஆசிரியர் – லாவண்யா சுந்தரராஜன் காலச்சுவடு பதிப்பகம் 667, கே. பி. சாலை நாகர்கோவில் மு. ப. நவ. 2011 பக்கங்கள் 80 விலை 70ரூ.
பிரியத்தால் நிரப்பிய குவலை மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரியும் லாவண்யா சுந்தரராஜன் எழுதியிருக்கும் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இரவைப் பருகும் பறவை. தமிழ்ச்சூழலில் பெண் கவிதைகளுக்கென ஒரு சிலந்தி வலை பிண்ணப்பட்டுள்ளது. அந்த வலைக்குள் அகப்படாத கவிஞர் லாவண்யா. தனக்கென ஒரு கவிதை மொழியை உருவாக்கிக்கொண்டு அதன் அடுத்த கட்டத் தேடலாகத்தான் இவரது கவிதைகள் உள்ளன. கவிஞர் சுகுமாரன் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடுவதைப் போல, அன்புதான் இவரது கவிதைகளின் தேடல். அன்பு கிடைக்காத போது அடையும் வெறுமையும் ஏமாற்றமும்தான் லாவண்யா கவிதைகளின் உள்ளடக்கம். தொட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள மீன் குஞ்சுகளின் வாழ்க்கையைப் போல பெண்களின் வாழ்க்கையும் அமைந்திருப்பதை எந்தவித அறத்தையும் போதிக்காமல் ஒரு கவிதை சொல்லிச் செல்கிறது. அந்த சிறிய இடத்திற்குள் வாழ தன்னை சில நாட்களுக்குள்ளேயே அந்த மீன் குஞ்சானது பழக்கிக்கொண்டு தன் சுதந்திரத்தை மறுகட்டமைப்பு செய்வதையும் பார்க்கிறோம். ‘நதியின் பிழையன்று நறும்புனலின்மை’ என்ற கம்பனின் கருத்தை ‘மணலும் நதியும்’ என்ற இவரின் கவிதை வெளிப்படுத்துகிறது. பிற பெண் கவிஞர்களிடமிருந்து இவரது மொழியே இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. ‘வேருக்குத் தெரியவில்லை – வெட்டப் பட்ட மரத்தின் வலி’ போன்ற மிகச்சிறந்த படிமங்கள் தொகுப்புகளில் விரவிக் கிடக்கின்றன. அடுத்து வரக்கூடிய தொகுப்புகளின் இவர் தன்னுடைய மொழியைத் தொலைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை லாவண்யாவுக்கு இருக்கிறது. நன்றி: அடவு, ஆகஸ்ட்-செம்ப்டம்பர்.