ஓ ஹோ பக்கங்கள்
ஓ ஹோ பக்கங்கள், ஞாநி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். பக். 248, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-171-3.html
எழுபதுகளிலிருந்து இன்று வரை தொடர்ந்து தமிழ்ச் சமூகச் சூழலின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் பற்றி விருப்பு, வெறுப்பற்று தனது கருத்துக்களைத் துணிவுடன் ஊடகங்களில் பதிவு செய்து வருபவர் ஞாநி. ஓ பக்கங்கள் என்ற தலைப்பில் வெவ்வேறு இதழ்களில் அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில் உள்ள கட்டுரைகள் மனிதர் கழிவை மனிதர் அள்ளும் கொடுமை, இந்தியன் பீனல் கோடு செக்ஷன் 377, நந்திகிராமத்தில் பொது மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல், தி டாவின்ஸி கோ படத்துக்குக் கிறிஸ்தவ அமைப்புகள் தெரிவித்த எதிர்ப்பு, தமிழ்நாடு தனிநாடு ஆகவேண்டுமா? வங்கதேச நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார், நம்மூர் நடிகர் நாகேஷ் என்று சூரியனுக்குக் கீழ் உள்ள எல்லா விஷயங்கள் குறித்தும் தன் கருத்தைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளார். குறிப்பாக கண்டேன் கண்டேன் என் கண்களால் நான் கண்டேன் கட்டுரையில் இவர் குறிப்பிடும் இலவசங்களக்க எல்லாம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை அள்ளித்தரும் மாநில அரசு, கண் அறுவைச் சிகிச்சைக்காக வெறும் 50கோடி ரூபாயை ஓதுக்கினாலே போதும் தமிழகத்தின் எல்லா ஏழைகளுக்கும் கண் அறுவைசிகிசிசை செய்துவிட முடியும் என்ற கருத்தும், யார் இடியட்? டி.வியா, நாமா? என்ற கட்டுரையில் டி.வி. நிகழ்ச்சிகளுக்கு என இவர் பரிந்துரைக்கும் சில விதிமுறைகளையும் உடனடியாக மாநில அரசு அமல்படுத்தலாம். ஏன் தமிழா ஏன்?, சர்ச்சைக்குரிய உறவுகள், உலகத்தின் குப்பைத் தொட்டியா இந்தியா? வேண்டாம் சாதனை வெறி ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. சமூக சிந்தனை மிக்க கட்டுரைகள் படிக்க முடியாதவாறு சுவாரஸ்யமற்று இருக்கும் என்கிற கருத்தை பொய்ப்பித்திருக்கிறது ஞானியின் இக்கட்டுரைகள். நன்றி: தினமணி, 5/8/2013.
—-
பாபாஜி சித்தர் ஆன்மீகம் தீபாவளி மலர், பக். 320, விலை 120ரூ.
இந்த மலரில் முழுக்க முழூக்க ஆன்மிக மணம் கமழ்கிறது. பாரதி காவலர் கே. ராமமூர்த்தி எழுதிய ரிஷ்ய சிங்கர் ஆலய வரலாறு கட்டுரை, சிருங்கேரி சுவாமிகளின் அருளுரை ஆகியவற்றுடன் அமர்க்களமாகத் துவங்குகிறது மலர். ஆன்மீகம் பாரதத்தின் பரம்பரைச் சொத்து என்ற நல்லி குப்புசாமி செட்டியாரின் கட்டுரை குறிப்பிடத்தக்கது. ஆலயங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் குறித்து மாதா அமிர்தானந்தமயி கூறுவது சிந்திக்கத்தக்கது. அட்ட வீரட்டானத் தலங்கள், மகாபாரதம் நிகழ்ந்த தலங்கள், அமர்நாத் புனித யாத்திரை ஆகியவை ஆன்மிகச் சுற்றுலாச் சிறப்பு. காஞ்சியில் ஆழ்வார்கள் போற்றி 14 திவ்ய தேசங்கள் குறித்த கட்டுரை படங்களடன் கூடிய ஒரு தகவல் பெட்டகம். திருப்புகழ் பேசும் மதிவண்ணனின் பேட்டிக் கட்டுரை, குருவின் லட்சணம் கூறும் வள்ளலார் குறித்த கட்டுரை ஆகியவை சிறப்பு. விநோத சித்தர்கள், சித்தர்களை வணங்குங்கள் ஆகிய சித்தர்களைப் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரைகள் இந்த மலருக்கே உரிய முத்திரை. இன்று நடக்கும் ஆலய வைபவங்கள் குறித்து எம்.என். ஸ்ரீனிவாசனின் கட்டுரை, சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை, இரு இதிகாசங்கள் பற்றிய ஆர். நடராஜின் தோஷமில்லா சந்தோஷம் என அனைத்துமே சிறப்பு. பாபாஜி, சத்குரு ஞானானந்தர் ஆகியோரைப் பற்றிய அனுபவங்கள் படிக்கப் படிக்கத் திகட்டாதவை. நன்றி: தினமணி, 26/11/2012.