காஞ்சி மகான் தரிசனம்

காஞ்சி மகான் தரிசனம் (கச்சிமூர்த்தி நூலின் மறுபதிப்பு), ஸ்ரீமடம் பாலு, இலக்கியப் பீடம் பதிப்பகம், பக். 256, விலை 150ரூ.

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த காஞ்சி மாமுனிவரான மகா பெரியவரின் பெருமையும் புகழும் அவர் நிகழ்த்திய தெய்வீக நிகழ்வுகளும் சொல்லில் அடங்காதவை. அவருடன் அணுக்கமாக இருந்து அவருடைய அருளைப் பெற்று, அனுபவித்தவர்கள் சொல்லிக் கேட்க வேண்டும் என்றால் அதன் சுவையே தனிதான். காரணம் மகா பெரியவரின் சின்னச் சின்ன காரியங்களில்கூட தத்துவார்த்தமான செய்திகள் பொதிந்து கிடந்ததை அதுவும், மகா பெரியவருக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த அணுக்கத் தொண்டர் ஒருவர் அவற்றைக் கூறக்கேட்க என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஸ்ரீமடம் பாலு என்று பக்தர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் ஸ்ரீ பாலசுப்பிரமணியன் தான் தொகுத்து வைத்திருந்த பெரியவருடனான அனுபவ நிகழ்வுகளுக்கு வடிவம் கொடுத்து, இலக்கிய பீடம் மாத இதழில் தொடராக எழுதினார். அத்தொடரே தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. மொத்தம் 189 தலைப்புகள். சின்னச் சின்ன சுவாரஸ்யமான தரிசனப் பதிவுகள். குறிப்பாக, அநாதை பிரேத ஸம்ஸ்காரம் செய்தால் அசுவமேதயாகம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்ற சாஸ்திர வாக்கியத்தையே மகாபெரியவர் “என்ன அசுவேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?  என்று ஸ்ரீலக்ஷ்மி காந்த சர்மாவிடம் சூசகமாகக் கேட்டது. பெரியவர் கூறிய வைத்யோ நாராயணோ ஹரி என்ற வாக்கால், திருமணமாகி இரண்டே மாதமான இளைஞனின் தலையில் உள்ள கட்டி எப்படிக் கரைந்தது? ஜன்ம குருவால் வரும் ஆபத்தைக் கண்டு கலங்கிய பக்தருக்கு பெரியவரால் தெளிவானது எப்படி? வயிற்று வலிக்கு பலாச்சுளை பார்த்துப் போ, கத்தி எங்கே? ஜோதிடர்கள் அவசியம் படிக்க வேண்டிய குலம், கோத்திரம், மனப்பொருத்தம் இப்படி பலரும் அன்றாடம் தங்களுக்குள் கேட்டுக் கொண்டிருக்கும் பலவிதமான கேள்விகளுக்கு மகா பெரியவரின் தரிசன அனுபவ நிகழ்வுகள் விடை தருகின்றன. மகா பெரியவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு. பலன் உண்டு என்பதை இதிலுள்ள பதிவுகளின் மூலம் உணரமுடிகிறது. நன்றி: தினமணி, 2/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *