கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும்
கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும், க. சிவாஜி, அலைகள் வெளியீட்டகம், பக். 312, விலை 200ரூ.
நாட்டின் கிராமப்புற முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றி வரும் கூட்டுறவு இயக்கம் குறித்தும், தமிழ்நாட்டில் அவ்வியகத்தின் முன்னோடிகளான பிட்டி தியாகராயர், எல்.கே. துளசிராம், டி.ஏ. இராமலிங்கம் செட்டியார், பி.டி.இராசன், வே.வ. இராமசாமி, மேடை தளவாய் குமாரசாமி முதலியார் பி.எஸ். குமாரசாமி ராஜா, டாக்டர் பி. நடேசன், கே.ஏ. நாச்சியப்ப கவுண்டர், எம்.பி. நாச்சிமுத்து, பி.எஸ். இராஜகோபால் நாயுடு, கே.எஸ். சுப்ரமணியக் கவுண்டர் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்பு, பணிகளை நூலாசிரியர் தொகுத்து அளித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மட்டுமல்லாது, நாடு விடுதலையடைந்த பிறகும் நூலில் குறிப்பிட்ட கூட்டுறவு இயக்க முன்னோடிகளின் பணிகளையும், கூட்டுறவு இயக்கங்களின் மூலம் அவர்கள் கற்றுக்கொண்ட மக்களாட்சிப் பண்புகளையும், நிர்வாக நுணுக்கங்களையும், வரலாற்றுச் சம்பவங்களுடன் தொகுத்துள்ளார். சென்னை மகாணத்தின் முதல் பதிவாளராக இருந்த சர்.பி. இராஜகோபாலாச்சாரியார் இருந்தபோது தியாகராயர் உள்ளிட்ட கூட்டுறவாளர்களின் முயற்சியால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு தலைமைக் கூட்டுறவு வங்கியின் கடந்து வந்த பாதை, விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், வீட்டு வசதியை ஏற்படுத்த வேண்டும் என தியாகராயர் கோரியதும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்றக்குடி அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும், கூட்டுறவு இயக்கத்தின் மூலம் மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளையும் வரலாற்றுத் தகவல்களுடன் படம் பிடித்துள்ளார். கூட்டுறவு இயக்கம், அதன் முன்னோடிகளின் வாழ்வு, தொண்டு குறித்து பதிவு செய்துள்ள அரிய நூல் இது. நன்றி: தினமணி, 1/6/2015.