சத்யஜித் ரே
சத்யஜித் ரே, திரைமொழியும் கதைக்களமும், பிரக்ஞை பதிப்பகம், சென்னை, விலை 225ரூ.
அறிந்துகொள்ளலாம் சத்யஜித் ரேயை இந்திய எதார்த்தத்தை முதல்முறையாக செல்லுலாய்டில் பிடித்த திரைக்கலைஞர் சத்யஜித் ரே. வணிக சினிமாவுக்கு மாற்றாகத் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து நடக்கும் திரைப்பட முயற்சிகளுக்குத் தூண்டுதலைத் தருபவராக மறைந்த பிறகும் சத்யஜித் ரேயின் படைப்புகள் இருந்துவருகின்றன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வாழ்ந்து மறைந்த நடன ஆளுமை பால சரஸ்வதி குறித்துக் கலாபூர்வமான ஆவணப்படத்தை எடுத்தவர் என்ற வகையில் தமிழகத்தோடும் தொடர்புகொண்டவர் ரே. சத்யஜித் ரே என்னும் ஆளுமையின் கலைமரபு, குடும்ப, தொழில் பின்னணி முதல் அவரிடம் சிறப்பாக சிலாகிக்கப்படும் இசைஞானம் வரை முழுமையாக அறிமுகப்படுத்தும் நூல் இது. ரேயின் சினிமா வாழ்வை அறிந்துகொள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள த்ரித்ததிமன் சாட்டர்ஜி எடுத்த நேர்காணல் இந்நூலில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பதேர் பாஞ்சாலி தொடங்கி அவரது அரசியல் பார்வைகள் உட்பட பல விஷயங்களை இந்த நேர்காணலில் பகிர்ந்துகொள்கிறார் ரே. பால சரஸ்வதியைப் படம்பிடிக்கும்போது, அவரது நடனத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு செயலிழந்த ஒரு தருணத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார். “என்னுடைய ஒளிப்பதிவுக் கருவி படமெடுத்துக்கொண்டிருப்பது தன்னுடைய கலைத் திறனின் உச்சகட்ட பரவசத்தில் ஆழ்ந்திருந்த பாலாவை என்ற எண்ணம் என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியது”. அரிய புகைப்படங்களைக் கொண்டிருக்கும் இந்த நூலை பிரக்ஞை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. லதா ராதாகிருஷ்ணன் மொழிபெயர்த்திருக்கிறார். -வினுபவித்ரா. நன்றி: தமிழ் இந்து, 21/2/2015.