சயாம்-பர்மா மரண ரயில் பாதை
சயாம்-பர்மா மரண ரயில் பாதை, சீ. அருண், விலை ரூ. 130; சயாம் மரண ரயில், சண்முகம், விலை ரூ. 150, தமிழோசை பதிப்பகம், 21/8 கிருஷ்ணா நகர், மணியக்காரம்பாளையம் சாலை, கணபதி, கோவை- 641012.
‘கேட்டிருப்பாய் காற்றே’ என்று மனம் கசந்து கண்ணீர் சிந்திய உலகத் தமிழர்களின் அவல வரலாறுகள் ஏராளம். ஆனால் தமிழர்களின் எந்தப் பேரவலமும் உலக வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் பெறுவதில்லை. நீதிமிக்க சமூகத்தின் பார்வைக்கும் வருவதில்லை. இரண்டாம் உலகப் போரின்போது சயாம்-பர்மா ரயில் பாதை அமைப்பதற்காக கூலிகளாக ஜப்பானியர்களால் கொண்டுசெல்லப்பட்ட பல ஆயிரம் தமிழர்கள், அந்தப் பணியில் எப்படி அழிக்கப்பட்டார்கள் என்பதை இந்த இரண்டு நூல்களும் மனம் பதைக்கச் செய்யும் வகையில் விவரிக்கின்றன. இரண்டாம் உலகப்போரில் பர்மா, சயாம், சிங்கப்பூர், மலேசியா எனப் பல நாடுகளைக் கைப்பற்றிய ஜப்பான், இந்தியாவின் மீது தாக்குதல் தொடுக்க விரும்பியது. இதற்கு ஜப்பானிலிருந்து படைகளைக் கடல் வழியாகக் கொண்டுவர நீண்ட காலம் பிடிக்கும். எனவே சயாமிலிருந்து பர்மா வரை 416 கிலோமீட்டர் தூரத்திற்கு அது குறுகிய காலத்தில் ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டது. ஐந்தாண்டுகள் செல்லக்கூடிய இந்தப் பணி 16 மாதங்களில் முடிக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் இரண்டரை லட்சம் பேர் இறந்துபோயினர். சரியாக வேலை செய்யாதவர்களை ஜப்பானியர்கள் கொன்றனர். கடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கினர். இந்தத் திட்டத்தில் வேலை செய்தவர்களில் 60 சதவிகிதத்தினர் தமிழர்களே. இந்த இரண்டு நூல்களுமே மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் போர்க் குற்றம் குறித்த சாட்சியம் சொல்கின்றன. நன்றி: குங்குமம் 21-01-2013