தண்டியலங்கார மூலமும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் 14ஆவது பட்டம் சுப்பிரமணிய தேசிகர் உரையும்
தண்டியலங்கார மூலமும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் 14ஆவது பட்டம் சுப்பிரமணிய தேசிகர் உரையும், ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம், பக். 480, விலை 300ரூ.
வடமொழி இலக்கண மரபைப் பின்பற்றி இயற்றப்பெற்ற நூல்களுள் தண்டியலங்காரமும் ஒன்று. மிக அதிகமான அளவில் வடமொழியில் அணியியல் நூல்கள் தோன்றின. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வடமொழியில் இயற்றப்பட்ட காவ்யாதர்ஸ்ம் என்னும் நூலினைப் பின்பற்றியும் அதன் மொழிப்பெயர்ப்பாகவே தண்டி என்பவரால் தமிழில் இயற்றப்பட்டதே தண்டியலங்காரம். முதன் முதலாக தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், ‘தண்டியலங்கார மூலமும் சுப்பிரமணிய தேசிகரால் செய்யப்பட்ட உரையும்’ என்ற நூலைப் பதிப்பித்தார். தற்போது இந்நூலினை சதித்திர ஆராய்ச்சியாளர் ச. கிருஷ்ணமூர்த்தி, ஆராய்ச்சி செய்து, தமது ஆராய்ச்சி உரையுடன் புதுப்பித்துள்ளார். தண்டியலங்காரம் அணியிலக்கணமாகும். இது பொருளணி இயல், சொல்லணி இயல், சித்திரக் கவி எழுத்துகளின் வகை, மலைவு என்று விளக்கப்பட்டுள்ளது. செய்யுள்கள் வெண்பாக்களுடனும் அணியிலக்கணத்துடனும் அலங்கரிக்கப்பட்டு மக்களுக்கு எளிதாய் சென்றடைந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. மேலும் செய்யுளை அதன் பொருளை ரசனையுடன் படித்து புரிந்து கொள்ளும்படியாக அமுது படைத்திருக்கிறார் நூலாசிரியர். அக்காலத்திலேயே பாலிண்ட்ரோம்கள் எனப்படும் முறையில் செய்யுள் வரிகள் எடுத்தாளப்பட்டு செய்யுள் ஆக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. தமிழார்வம் கொண்டோர் அவசியம் படிக்க வேண்டிய இலக்கண நூல். நன்றி: தினமணி, 4/1/2016.