திரை இசைத் திலகங்கள்
திரை இசைத் திலகங்கள், வி.ராமமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.224. விலை ரூ.180.
இசையமைப்பாளர்கள் ஜி.ராமநாதன் முதல் இளையராஜா வரையிலான ஐம்பத்திரண்டு இசைக்கலைஞர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர்களின் பங்களிப்புகள்; அனுபவங்கள் குறித்து விவரிக்கும் நூல். இசையமைப்பாளர்கள் தவிர, பாடி நடித்த நடிகர்-
நடிகைகள் மற்றும் பிரபல பின்னணி பாடகர்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா, என்.சி.வசந்தகோகிலம், எம்.எல்.வசந்தகுமாரி, பி.ஜெயச்சந்திரன் முதலானவர்கள் குறித்த தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
சி.ஆர் சுப்பராமனின் திடீர் மறைவுக்குப் பின் அவரின் உதவியாளர்களாக இருந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி தனித்து இசையமைக்கத் தொடங்கியது, எம்.ஜி.ஆர். படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு சங்கர்-கணேஷுக்கு கிடைத்தபோது, கணேஷின் மாமனார் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்ததும் – பின்பு, எம்.ஜி.ஆர். இசையமைப்பாளர் பெயரைச் சொல்லாமல் பாடல்களை ஜி.என்.வேலுமணிக்கு போட்டுக்காட்டி சம்மதம் வாங்கியது ‘சங்கராபரணம் 39’ படத்திற்கு இசையமைக்க வட இந்திய இசையமைப்பாளர்கள் பலர் தயாராக இருந்தபோதிலும், கே.வி.மகாதேவன்தான் வேண்டும் என்று இயக்குநர் கே.விஸ்வநாத் தேர்வு செய்தது போன்ற சுவையான சம்பவங்கள் நூல் முழுவதும் நிரம்பியுள்ளன. திரை இசை ரசிகர்கள் படித்துப் பாதுகாக்க வேண்டிய தகவல் களஞ்சியம்.
நன்றி: தினமணி, 3/4/2017.