தொல்காப்பியத்தில் இசை
தொல்காப்பியத்தில் இசை, முனைவர் இராச. கலைவாணி, ஏழிசை இசை ஆய்வகம், தமிழ்க் கலையகம், மயிலாடுதுறை, பக். 608, விலை 350ரூ.
சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் இசை பற்றிய செய்திகள், இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அந்த வகையில் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், தொல்காப்பியர் நாடக வழக்கையும், உலகியல் வழக்கையும் ஆராய்ந்து ஐந்திணை நில அமைப்பு, அதற்குரிய பண்கள், இசைக்கருவிகள் பற்றி பல நூற்பாக்களில் கூறியிருக்கிறார். அத்தகைய நூற்பாக்களை மேற்கோள்காட்டி, இசை, பாவகைகள், பண்கள், இசைக்கருவிகள், இசை வடிவங்கள், இசைக்கலைஞர்கள், கூத்துகள் முதலியவற்றை மிகவும் நுட்பமாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியத்திலுள்ள இசை பற்றிய இயலில் யாழ், பறை, பண் ஆகிய மூன்று மட்டுமே எல்லோராலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த மூன்றினோடு ஓசையும் வண்ணங்களும் இதில் கூறப்பட்டுள்ளன. இசைக்கருவிகள் இயலில், நரம்புக் கருவிகள், தோற்கருவிகள் போன்றவையும், இசை வடிவங்கள் பகுதியில், இசை வடிவங்கள் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகளும், இசைக்கலைஞர்கள் பகுதியில் கூத்தர், பொருநர், பாணர், விறலி ஆகிய நால்வரின் தனிச் சிறப்புகளும், கூத்துக்கள் பகுதியில் தொல்காப்பியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கூத்துகளில் போர் நிகழ்வுக் கூத்துக்கள், தெய்வ வழிபாட்டுக் கூத்துகள் என இருவேறு கூத்துக்களைக் கூறி, அவற்றில் போர் மறவர்கள் ஆடும் கூத்துக்கள், அரசன் ஆடும் கூத்துக்கள், பாண் மரபினர்களாகிய பாணர், கூத்தர், பொருநர், விறலியர் போன்றோர் ஆடும் கூத்துக்கள், முருக வழிபாட்டில் ஆடும் கூத்துக்கள் ஆகியவற்றோடு திணைசார்ந்த சமயச்சடங்குகளில் நிகழும் கூத்துக்கள் என விளக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தின் பெருமையையும், தமிழிசையின் தொன்மையையும் தனித்தன்மைககளையும் தகுந்த ஆதாரங்களுடன் நிலைநாட்டியுள்ள அரிய ஆவணப்பதிவு. நன்றி: தினமணி, 17/11/2014.