த மியூசிக் ஸ்கூல்
த மியூசிக் ஸ்கூல், செழியன், த. மியூசிக் ஸ்கூல் பப்ளிகேஷன்ஸ், சாலி கிராமம், சென்னை, விலை 7000ரூ.
திரைப்படங்களில் நடிகர்களோ நடிகைகளோ, தங்கள் இரு கைகளாலும் பியானோவோ, கீ போர்டோ வாசிக்கும்போது, பல சமயம் நாமும் அப்படி ஒரு கணம் வாசிப்பது போன்று சிறு பிரம்மை, நம்மில் பலருக்கு தோன்றி மறையும். அந்த இசையின் நாதமும் உணர்ச்சி வெளிப்பாடுகளும் அப்படி எண்ணவைக்கும். அந்த எண்ணத்தை நனவாக்கித் தர வந்திருக்கிறது தி மியூசிக் ஸ்கூலின் இந்த பத்து புத்தகங்கள். இசை உங்கள் வாழ்வில் என்னென்ன மாயங்கள் செய்கிறது, ஒருவர் இசையை ஏன் கற்க வேண்டும், அதன் முக்கியத்துவம் என்ன என்கிற அடிப்படை கேள்விகளிலிருந்து துவங்கி, மெல்ல மெல்ல அடர்பாசியில் நழுவும் கால்கள்போல, மேற்கத்திய இசைப் பயிற்சிக்கு இட்டுச் செல்கின்றன இந்நூல்கள். சங்கீதம் படிப்பதால் குழந்தைகள் படிப்பில் விளையும் ஆக்கபூர்வமான மாற்றங்கள், பொறுமை, ரசனை மனோபாவம் என்று இசையின் விசேஷ குணநலன்களை பற்றி இதில் படிக்கிறபோது, இசை ரசனை என்கிற பாடம் ஏன் நம் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒரு பாடத்திட்டமாக இன்னும் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி இயல்பாய் நம்முள் எழுகிறது. ஏற்கனவே இணையவழியில் மேற்கத்திய இசையை சொல்லித்தரும் தளங்களும் தமிழில் சில புத்தகங்களும் இருந்தாலும் சரியான அர்த்தத்தில் எல்லா முனைகளிலும் தரமான இசைக் கல்வியை தமிழில் போதிக்கும் இந்நூல்கள் இத்துறையின் ஒரு முன்னேர். இந்த நூல்களை வாசிப்பது வெறும் பாடமாக இல்லாமல், அனுபவமாக மாறுகிறது இவற்றை முறையாக முழுமையாகப் படித்தால் மேற்கத்திய இசை தியரியில் தரமான புலமை கிட்டும். கலையின் சூட்சுமங்களை தனக்கென மட்டுமே இறுக்கிக்கொண்டு சுருங்காமல், அதன் பலன்கள் சகலருக்கும் சேருமாறு பகிர்ந்துகொள்கிறார் செழியன். ஒரு இசைப்பள்ளி பெரும் பொருட்செலவு செய்து, தமிழில் இசை பற்றி எழுதத் தெரிந்த ஆசிரியர் குழுவை நியமித்து, பல ஆண்டுகள் அரும்பாடுபட்டு செய்ய வேண்டிய பணியை, ஒரு தன்னந்தனி மனிதராக 15 ஆண்டுகள் அசாத்தியமாக உழைத்து சாதித்திருக்கிறார். அறிமுகம், நோட்ஸ், தாளம், ஸ்கேல், இண்டர்வெல் என சிறு சிறு எளிய பாடத்திட்ட பகுப்புகள், அனுபவம் சார்ந்த காத்திரமான உள்ளடக்கங்கள், செய்வதை திருந்த செய்யவைக்கும் முனைப்பு போன்றவை எல்லாம் இந்நூல்களுக்கு தனித்த அடையாளத்தை உருவாக்கி உள்ளன. இசை தெரிந்தவர்கள் பலருக்கும் மேற்கத்திய இசை கோட்பாடுகள் எளிதில் விளங்குவது இல்9லை. சொல்லித்தரும் ஆசிரியர்களில் பலர் அதை கடினமாக்கி படுத்தும்பாடு, சிலருக்கு அதிலிருந்து ஒரு விலகலை ஏற்படுத்திவிடுகிறது. அந்த குறையே இல்லாமல் ஒரு தாயின் பரிவோடு பொறுமையாய் எளிதாய் போதிக்கின்றன இப்பாடங்கள். அதே சமயம் ஒரு தகப்பனின் கண்டிப்போடு, விடையில்லா வினாப்பகுதிகள் மூலம் சோதித்து புரியாததை மறுபடியும் படிக்க வைத்து விரல்கள் வழியாக வாசிக்க வேண்டியதை மறுபடியும் வாசிக்க வைத்துப் புரிந்துகொள்ள வைக்கின்றன. மனசில் பதிந்து விடும் எளிய உதாரணங்கள், பொன்மொழிகள், வாழ்க்கைச் சம்பவங்கள், கவிதைகள், கர்னாடக இசையோடு கூடிய ஓப்பீட்டுப் பாடங்கள், இணையத்தின் வழி ஒலி உதாரணங்கள் என அலுப்புத் தட்டாமல் சொல்கிறார் செழியன், இயல்பில் அவர் ஒரு ஒளிப்பதிவாளராகவும் இருப்பதால், பாடங்களை படம் வரைந்து, பாகங்கள் குறித்து, காட்சிப்பூர்வமாக வடிவமைத்துள்ளார். நம்பிக்கையூட்டும் வாசகங்களோடு பாடங்களுக்கு அழைத்துச் செல்லும் மொழி இயல்பாய் எளிதாய் கூடி வந்திருப்பது முக்கிய பலம். இசை குறித்த முன்படிப்போ முன் பயிற்சியோ இல்லாமல், இந்நூல்களை மட்டுமே படித்து சிலர் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் தேர்ச்சி பெற்றிருப்பது இதன் தரத்துக்கான சாட்சிகள். இதை முறையாக முழுமையாக படித்து முடித்ததும் ஒரு பாடலை கம்போஸ் செய்ய அடிப்படை ஞானமும் ஒரு பாடலைக் கேட்டால் அதை கீபோட்டில் வாசிக்கும் திறன் அதன் நொட்டேஷன்களை எழுத்தாய் எழுதும் திறனும் ஒருவருக்கு எளிதாய் வந்துவிடும் என்கிறார் செழியன். இசை மேல் காதல் கொண்டவர்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்? நன்றி: 9/4/2014, இந்தியா டுடே.