நான், ஜிபு மற்றும் புற்றுநோய்
நான், ஜிபு மற்றும் புற்றுநோய், ம.அஹமது நவ்ரோஸ் பேகம், என்.ஜே.பதிப்பகம், பக். 96, விலை 30ரூ.
சென்னை புரசைவாக்கம் ஜே.எம்.பள்ளியின் முதல்வர் அஹமது நவ்ரோஸ் பேகம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மகன் ஜிபு என்ற ஜிப்ரீல் பட்ட அவஸ்தைகளையும், எடுத்துக்கொண்ட சிகிச்சைகளையும் கண்ணீருடன் பதிவு செய்திருக்கும் நூல் இது. ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கே உரிய திறமையுடன் மிக நேர்த்தியாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். மகனுக்கு உடல்நலம் குன்றிய முதல் நாளில் தொடங்கி, அவனை மருத்தவரிடம் காட்டியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, மகனுக்கு செய்யப்பட்ட இரத்தப் பரிசோதனைகள், புற்றுநோயின் தீவிரம், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டபோது பக்கத்துப் படுக்கையில் இருந்த புற்றுநோயாளிகள், அவர்களின் துன்பங்கள், பிரச்னைகள் என எல்லாவற்றையும் எளிய நடையில் உருக்கமாக எழுதியிருக்கிறார். சிறுவன் ஜிபுவிடமிருந்த புத்தி கூர்மையும், விஷயங்களை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றலையும், அம்மாவின் மனம் கவலையால் வாடி விடக்கூடாது என்று அந்தச் சின்ன வயதிலேயே இருந்த அக்கறையையும் நூலாசிரியர் விவரிக்கும்போது அந்தச் சிறுவனுக்கு அசம்பாவிதமாக எதுவும் நடந்துவிடக்கூடாது என்று படிப்பவர்கள் மனம் பதைபதைப்பது நிஜம். கடுமையான சிகிச்சையின்போதும் சரி, வலியும் வேதனையுமான கடைசி நாள்களிலும் சரி, இறைச் சிந்தனையுடன் இருக்கும் நூலாசிரியர், புனிதமான ரமலான் மாதத்தில் எட்டாம் நோன்பு அன்று இறைவனை அடைந்த எங்கள் செல்லக்குழந்தை சொர்க்கவாசிதான் என்று சொல்கின்ற மக்களின் கூற்றை அல்லாஹ் உண்மையாக்கி வைக்கட்டும் என்று நூலின் நிறைவுப் பகுதியில் எழுதியிருப்பது கண்களைக் குளமாக்குகிறது. நன்றி: தினமணி, 20/7/2015.