நீதி நூல் களஞ்சியம்
நீதி நூல் களஞ்சியம் (22 நூல்கள் உரையுடன்), உரையாசிரியர்கள் பத்மதேவன், தமிழ்ப்பிரியன், கொற்றவை வெளியீடு, சென்னை, பக். 1056, வலை 720ரூ.
ஒழுக்கம், நீதி, அறம், பண்பாடு பணிவுடைமை என்பதெல்லாம் என்ன? அவை என்ன விலை? எங்கே கிடைக்கும்? என்று கேட்கும் இன்றைய இளயை சமுதாயத்திற்கு தேவையான தொகுப்பு இந்நூல். மனித வாழ்க்கையைச் செம்மைபடுத்தும் நீதிநெறிக் கருத்துகளை நம் சங்கப் புலவர்கள் வாரி வழங்கியுள்ளனர். ஆனால், அதைப் படிப்போரும், அதன்வழி நடப்போரும் அருகிவிட்ட காலம் இது. நீதிநூல்கள் – அற நூல்கள் அனைத்தும் ஒரே தொகுப்பாகக் கிடைத்தால், அதுவும் எளிய விளக்கவுரையுடனும், குறிப்புரையுடனும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வெளியாகி இருக்கிறது இத்தொகுப்பு. முதலாவதாக, ஓளவையின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நான்கு நூல்கள், அதிவீரராம பாண்டியனின் வெற்றிவேற்கை, உலகநீதி, நன்னெறி ஆகிய மூன்று நூல்கள், குமரகுருபரரின் நீதி நெறிவிளக்கம், பெயர்தெரியாத புலவர் எழுதிய நீதி வெண்பா, தொகுத்தவர் பெயர் தெரியாத விவேகசிந்தாமணி, பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள நாலடியார் ஆகிய நூல்களுக்கு கவிஞர் பத்மதேவன் எளிய விளக்கவுரை எழுதியுள்ளார். இரண்டாவதாக, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் 11 நூல்கள் அறநூல்கள். (நாலடியாரையும் சேர்த்து) அவற்றுள் இனியவை நாற்பது, இன்னா நாற்பது, சிறுபஞ்ச மூலம், ஆசாரக்கோவை, நான்மணிக்கடிகை, திரிகடுகம், ஏலாதி, இன்னிலை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி ஆகிய பத்து நூல்களும், முனைப்பாடியார் எழுதிய அறநெறிச்சாரம் என்ற அறநூலும் இடம்பெற்றிருக்கின்றன. இந்நூல்களுக்கு தமிழ்ப்பிரியன் உரை எழுதியுள்ளார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் தலையாய நீதி நூல் திருக்குறள்தான். ஆனால், இத்தொகுப்பில் திருக்குறள் ஏனோ விடுபட்டுப்போயிருக்கிறது. அதேபோல் இத்தொகுப்பில் சொல்லடைவு இல்லததும், பாட்டு முதற்குறிப்பகராதி (விவேகசிந்தாமணிக்கு மட்டும் உள்ளது) இல்லாததும் குறையாகத் தோன்றுகிறது. இராமாயணப் பலகை, இல்லாமல் வாசிக்க முடியாது போலிருக்கிறே, ஏன் இரண்டு பாகங்களாக வெளியிட்டிருக்கக்கூடாது? நன்றி: தினமணி, 6/1/2015