நீராதிபத்தியம்

நீராதிபத்தியம், மாட் விக்டோரி பார்லோ, தமிழில் சா. சுரேஷ், எதிர் வெளியூடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 2, பக். 248, விலை 200ரூ.

பணத்தைத் தண்ணீரைப் போலச் செலவழிபப்து என்பது இப்போது ஒரு முரண் வாக்கியம் ஆகிவிட்டது. எவ்வளவு செலவு செய்தாலும் தண்ணீர் கிடைக்காத ஒரு கொடுங்காலத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டு இருக்கிறோம். கிணறுகளில், ஆறுகளில், வீட்டு ஆள்துளைக் கிணறுகளில் எங்கும் நீர் இல்லை. என்ன காரணம்? நம் நீராதாரத்தை நிர்மூலமாக்கியவர்கள் யார்? நம் குடிநீரில் மண் அள்ளிப் போட்டது யார்? இதில் லாபமடைவது யார்? அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான ஆதாரங்களுடன் பதில்களை முன்வைக்கிறது நீராதிபத்தியம். ஆங்கிலத்தில் மாட் விக்டோரியா பார்லோ எழுதிய Blue covenant என்ற நூலை நீராதிபத்தியம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சா. சுரேஷ். நடப்பு உலகில் அனைத்துத் துறைகளையும் மிரட்டும் ஏகாதிபத்திய நாடுகளும், அவர்களின் நிறுவனங்களும் நீரையும் விட்டுவைக்கவில்லை. இதைத் தெளிவாக உணர்த்துகிறது தலைப்பு. நீர்+ஏகாதிபத்தியம்=நீராதிபத்தியம் என்ற இந்தச் சமன்பாட்டின் விரிவாக்கம்தான் முழுப்புத்தகமும். இந்த உலம் வடகோளம், தென்கோளம் எனப் புவியியல்ரீதியாக மட்டும் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. வடகோள நாடுகள், தென்கோள நாடுகளைப் புவியியல் ரீதியாகச் சுரண்டி வாழ்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள், தென்கோள நாடுகளின் நீர்வளத்தைக் கணக்கில்லாத வகையில் உறிஞ்சி எடுக்கின்றன. வடகோளத்தில் பிறந்த ஒரு குழந்தை தென்கோளத்தில் பிறந்த குழந்தையைவிட 40 முதல் 70 மடங்கு அதிகமான தண்ணீரைப் பயன்படுத்துகிறது. உலகம் முழுக்கவும் வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது. உலகளாவிய அளவில் தண்ணீரைச் சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் புத்தகம் முழுவதும் காணக்கிடிக்கின்றன. நீர்வளத்தை வேட்டையாடிவிட்டு, அடுத்தது கழிவுநீரைச் சுத்திகரிப்பதிலும் லாப வேட்டை நடத்துகின்றனர் என்பதையும் இந்த நூல் தெளிவாக விவரிக்கிறது. பொதுவாக தண்ணீர் பிரச்னையின் அபாயத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது நம் அடுத்த தலைமுறைக்கு ஒரு சொட்டுநீர்க்கூட மிச்சம் இருக்காது என்று சொல்வது உண்டு. ஆனால் இந்தப் புத்தகம் அந்த அபாயம் அடுத்த 10 ஆண்டகளிலேயே வந்துவிடும் என்கிறது. நாம் வாழும் இந்தக் காலத்திலேயே குடிநீருக்காகத் தெருத்தெருவாக அலையப்போகிறோம் என்ற உண்மையை உரிய தரவுகளுடன் நிறுவுகிறது. சா. சுரேஷ் இந்த நூலை மிகச் சிரத்தையுடன் மொழிபெயர்த்திருக்கிறார். எளிய தமிழில் தடையற்ற மொழிநடையில் பயணிக்கும் புத்தகம். பல இடங்களில் மொழிபெயர்ப்பு என்ற உணர்வை மறக்கச் செய்கிறது. தண்ணீர் போன்ற வாழ்வாதாரப் பிரச்னையைப் பேசும்போது ரொமான்டிசைஸ் செய்யாமல் அறிவுச் செறிவுடன் எழுதப்பட்டிருக்கும் இப்படியான துறைசார் நூல்களின் வருகை, தமிழுக்கு ஆரோக்கியமானது. நன்றி: விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *