நெப்போலியன்
நெப்போலியன் சாமானியன் சக்கரவர்த்தியான சாதனைச் சரித்திரம், எஸ்.எல். வி. மூர்த்தி, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 416, விலை 300ரூ.
நெப்போலியனைப் பற்றிய ஏராளமான புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும், அவருடைய முழு பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வருவதாக அமைந்துள்ளது இந்நூல். பிரான்ஸின் காலனியான கார்ஸிகா என்னும் குட்டித் தீவில் பிறந்து, வறுமைச் சூழலில் அரசு நிதியுதவியோடு ராணுவப் பள்ளியில் சேர்ந்து, இரண்டு ஆண்டு படிப்பை ஓராண்டிலேயே படித்து முடித்து, 16ஆவது வயதில் லெஃடினெட், 24ஆவது வயதில் ராணுவப் படைத்தளபதி, பிரிகேடியர் ஜெனரல் என தனது கடின உழைபப்ல் உயர்ந்து 35ஆவது வயதில் பிரான்ஸின் சக்கரவர்த்தியானதும், பின்னர் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டதும், இறுதியில் ஹெலனா தீவில் சிறை வைக்கப்பட்டு மரணமடைந்ததும் என மாவீரன் நெப்போலியன் தொட்ட உச்சங்கள், சறுக்கல்கள் எல்லாம் இந்நூலில் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. விரிவான செயல் திட்டம், ராணுவ அறிவு, மனோதிடம், விவரத்தேடல், யுத்த வியூகம் என தனது நுணுக்கமான பல நடவடிக்கைகளால் அடுத்தடுத்த போர்களில் வெற்றி கண்ட நெப்போலியனின் வாழ்க்கை, ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். இராணுவத் தளபதியாக மட்டுமல்லாமல், தேர்ந்த அரசியல்வாதியாகவும், சிறந்த நிர்வாகியாகவும் பரிணமித்த நெப்போலியன், புத்தகங்ள வாசிப்பதிலும், கதை, கட்டுரை எழுதுவதிலும் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். யுத்த பரபரப்புக்கு இடையிலேயும், காதல் ரசம் சொட்டச் சொட்ட தனது மனைவிக்கு நெப்போலியன் எழுதிய கடிதங்கள், குடும்பத்தினர் மீது காட்டிய அன்பு என அவரது வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவாரசியமாகக் கொண்டு செல்லும் எஸ்.எல்.வி. மூர்த்தியின் எழுத்து நடை சிறப்பாக உள்ளது. நன்றி: தினமணி, 27/4/2015.