பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவம், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 80ரூ.

பள்ளியில் ஒரே பாடத்திட்டத்தைக் கற்றாலும் கற்றல் அனுபவம் அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பள்ளி அனுபவங்கள் இருக்கின்றன. அதனாலேயே பள்ளிப்பருவம் குறித்த அனுபவப் பகிர்தல்கள் எப்போதுமே சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கின்றன. ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி, அ.ராமசாமி, இமையம், பேராசிரியர் கல்யாணி, க. பஞ்சாங்கம் ஆகிய ஆறு ஆளுமைகள் தங்களது பள்ளிப்பருவம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்தநூல். இவர்களின் அனுபவம் அந்தக் காலத்தில் நிலவிய சமூக, கல்விச் சூழல்களை அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றன. கும்பகோணத்திலிருந்து திருநெல்வேலி வரை நிலவியல் சார்ந்தும் பள்ளி அனுபவங்கள் வெவ்வேறாக உள்ளன. மாணவர்களுடன் சாராயக் கடைக்குப் போன ஆசிரியரிலிருந்து, தாகூர் சிறுகதை குறித்து வகுப்பு ஆசிரியர் எடுத்த தி.ஜானகிராமன் வரை ஏராளமான ஆசிரியர்கள் இந்தச் சிறிய நூலில் வந்து போகின்றனர். மாணவர்களின் மீது அக்கறை கொண்ட ஆசிரியர்கள், சராசரியான ஆசிரியர்கள், மோசமான ஆசிரியர்கள் என இப்போதுள்ளதைப் போலவே அப்போதும் நிறைய ஆசிரியர்கள் இருந்துளளனர். ஒவ்வொரு கட்டுரையாளரின் பள்ளிப்பருவமும் வெவ்வேறு கால அனுபவங்களாக உள்ளதால், ஏறத்தாழ அரை நூற்றாண்டு நினைவுகளை இந்த நூல் தாங்கி நிற்கிறது. நன்றி: தினமணி, 15/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *