பாரதத்தின் விஸ்வரூபம்
பாரதத்தின் விஸ்வரூபம், ஐ. மாயாண்டி பாரதி, பாரதி பதிப்பகம், பாரதமாதா இல்லம், 13/10ஏ, சுப்பராயர் அக்ரஹாரம், காக்கா தோப்பு, மேலமாசி வீதி, மதுரை, விலை 100ரூ.
தியாகத்தை நேரில் பார்க்க வேண்டுமா? வாழும் வரலாறாக மதுரையில் வசித்துக் கொண்டிருக்கிறார் ஐ.மாயாண்டி பாராதி. பழகிய தோழர்கள் அனைவருக்கும் அவர் ஐ.மா.பா. இந்திய விடுதலை வேள்விக்கு விறகு சுமந்த ஐ.மா.பா. அதனை தனது பெரும் சாகசமாகக் கருதாமல், தனது கடமையாக நினைத்துச் செயல்பட்ட நினைவுகளுடன் 97 வயதைத் தாண்டி வாழ்ந்து வருகிறார். 15 வயதில் பட்டாளத்தில் சேராதே, யுத்த நிதி கொடுக்காதே என்று முழக்கம் போட்டு அலைந்த உற்சாகம் இன்னமும் ஐ.மா.பா.விடம் இருக்கிறது. மொத்தம் 13 ஆண்டுகள் சிறையில் கழிந்தவர். மதுரை, திருச்சி, வேலூர், கோவை, சென்னை, பாளையங்கோட்டை, தூத்துக்குடி, கொக்கிரக்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர், கடலூர், தஞ்சாவூர் என தமிழ்நாட்டின் எல்லாச் சிறைகளையும் பார்த்தவர். இந்திய விடுதலை வீரர்களின் தியாகத்தை இன்றைய இளைய தலைமுறைக்கு உணர்த்துவதற்காக ஐ.மா.பா. எழுதிய புத்தகம் இது. இங்கு நடந்த போராட்டங்கள், செய்த தியாகங்கள் பற்றி யாரும் அறிந்திருக்கிறார்களா? ஆம்… அறிந்திருக்கிறார்கள். ஆனால் மேம்போக்காக காரணம், பள்ளிக்கூடத்தில் முழுமையாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. தேச விடுதலைப் போராட்டக் காலத்திலும் மகாத்மாவின் போராட்டங்களிலும் கம்யூனிஸ்ட் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்கள் யார்? தியாகம் செய்தவர்கள் யார்? அவர்களெல்லாம் எவரோ அல்லர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் தகப்பனார்களும் தாய்மார்களும் அல்லவா? அவர்களால்தான் சுதந்திரம் கிடைத்தது. சுப்ரீம் கோர்ட் வந்தது. ஆண், பெண் சமத்துவம் வந்தது. கல்வி வந்தது. உங்கள் உறவுகளால்தான் பாரதம் விஸ்வரூபம் எடுத்தது என்கிறார் ஐ.மா.பா. காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் முதல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் வரை நினைவுபடுத்துகிறார். ஆங்கில ஆட்சிக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது என்று லெனின் சொன்ன தீர்க்க தரிசனம் எடுத்துக் காட்டப்படுகிறது. கட்டபொம்மனின் வீரம் பேசுபவர்கள் தானாதிபதி பிள்ளையின் தீரம் பேசுவது இல்லை. தூக்கிலிடப்பட்ட தானாதிபதி பிள்ளையின் தலையை அறுத்துக்கொண்டு போய் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் முன்னை ஈட்டியில் குத்திவைத்தார்கள். அவரது உடல், நாகலாபுரத்தில் தூக்கி வீசப்பட்டது. பிரிட்டிஷ் படையின் ஆயுதங்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது சிரமம் என்பதால், அவர்களது ஆயுதக் கிடங்கைக் கண்டுபிடித்து வீழ்த்திய சுந்தரலிங்கம், இந்தப் புத்தகத்தில் நினைவூட்டப்படுகிறார். என் பெயர் சுதந்திரம், என் தந்தை பெயர் சுதந்திரம், என் வீடு சிறைச்சாலை என்று நீதிமன்றத்தில் 14 வயதில் சொன்ன சந்திரசேகர ஆசாத், இதில் வருகிறார். இப்படி எண்ணற்ற தியாகிகளை, நெஞ்சில் கொண்டுவந்து நிறுத்துகிறார் ஐ.மா.பா. இந்த தியாக துருவங்களின் படங்கள் அனைத்தும் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவை படங்களல்ல, தெய்வங்கள். அவர்கள் காலைத் தொட்டுக் கும்பிடுங்கள். அவர்கள் உங்கள் தலையைத் தொட்டு வாழ்த்துவார்கள் என்கிறார் ஐ.மா.பா. அவரும் அத்தகைய தெய்வங்களில் ஒருவரே. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன் 27/10/2013